ஐஸ்கிரீம் மொத்த விற்பனை களமிறங்குகிறது ஆவின் நிறுவனம்
ஐஸ்கிரீம் மொத்த விற்பனை களமிறங்குகிறது ஆவின் நிறுவனம்
ஐஸ்கிரீம் மொத்த விற்பனை களமிறங்குகிறது ஆவின் நிறுவனம்
ADDED : ஜூலை 02, 2024 03:04 AM

சென்னை : திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளின் தேவைகளுக்கு, ஐஸ்கிரீம் மொத்த விற்பனையில் ஆவின் நிறுவனம் களமிறங்கவுள்ளது.
தற்போது, ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும், 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. சில மாதங்களுக்கு முன், இது 26 லட்சம் லிட்டராக இருந்தது. பால் மட்டுமின்றி, 230 வகையான பால் பொருட்களையும் ஆவின் உற்பத்தி செய்கிறது.
இவற்றில், ஆவின் நெய், பால்கோவா, ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்டவற்றிற்கு, நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.
ஆவின் குல்பி, ஐஸ்கிரீமை பொறுத்தவரை கோடைகாலத்தில் அவற்றின் விற்பனை அதிகரிப்பது வழக்கம். ஆண்டு தோறும், 20 சதவீத உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இனி ஆண்டு முழுதும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு, ஐஸ்கிரீம் மொத்த விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக, சென்னை அம்பத்துார், சேலம், மதுரையில் உள்ள ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலைகளில், உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலான பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து, ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத் கூறியதாவது:
கோடைகாலத்தில் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை அதிகரிக்கிறது. மழை மற்றும் பனிக்காலங்களில் குறைகிறது. எனவே, விற்பனை சராசரியாக இருப்பதற்கு, புதிய முயற்சியாக, மொத்த விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுஉள்ளது.
வெண்ணிலா, மேங்கோ, ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட், பட்டர் ஸ்காட்ச், பாதாம், பிஸ்தா' ஆகிய சுவைகளில், 5 லிட்டர் பெட்டிகளில் ஐஸ்கிரீம் விற்கப்பட உள்ளது.
தனியார் நிறுவனங்களின், ஐஸ்கிரீம் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. தரமாக உற்பத்தி செய்வதால், அவர்களை போல விலையை குறைக்க முடியாது.
அதேநேரத்தில், மொத்தமாக ஐஸ்கிரீம் வாங்குபவர்களுக்கு, சில சலுகைகளை வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.