ஜாபர் சாதிக் வங்கி ஆவணம் போலியா என ஈ.டி., விசாரணை
ஜாபர் சாதிக் வங்கி ஆவணம் போலியா என ஈ.டி., விசாரணை
ஜாபர் சாதிக் வங்கி ஆவணம் போலியா என ஈ.டி., விசாரணை
ADDED : ஜூலை 27, 2024 04:15 AM

சென்னை: ஜாபர் சாதிக், வங்கி பண பரிவர்த்தனை ஆவணத்தின் பதிவுகளில் முரண்பாடுகள் இருப்பதால், போலியாக தயாரிக்கப்பட்டவையா என்ற கோணத்தில், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனா பானு மற்றும் சகோதரர் முகமது சலீம் மீது, அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ள ஜாபர் சாதிக்கை, ஏழு நாள் காவலில் எடுத்தும் விசாரித்துள்ளனர். அவரின் மனைவி அமீனா பானுவிடமும் விசாரிக்கப்பட்டு உள்ளது.
ஜாபர் சாதிக் வங்கி கணக்கில் இருந்து, சினிமா பட இயக்குனர் அமீருக்கு, 3.93 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.
ஜாபர் சாதிக், அமீனா பானு, முகமது சலீம் ஆகியோர் வங்கி கணக்கு வாயிலாக செய்த பண பரிவர்த்தனைகள் குறித்த ஆவணங்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டி உள்ளனர்.
சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடவில்லை என, ஜாபர் சாதிக் தரப்பிலும், வங்கி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கும், அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டியுள்ள ஆவணங்களிலும், வங்கி பண பரிவர்த்தனை பதிவுகளில் முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'நாங்கள் திரட்டி உள்ள, ஜாபர் சாதிக் வங்கி கணக்கில் இருந்து சில முக்கிய புள்ளிகளுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. 'ஆனால், ஜாபர் சாதிக் தரப்பில் தாக்கல் செய்து உள்ள ஆவணத்தில், அது தொடர்பான பதிவுகள் இல்லை. போலி ஆவணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்' என்றனர்.