-மகளிரை தொழில் முனைவோராக்க 'டி.என்., ரைஸ்' திட்டம் துவக்கம்
-மகளிரை தொழில் முனைவோராக்க 'டி.என்., ரைஸ்' திட்டம் துவக்கம்
-மகளிரை தொழில் முனைவோராக்க 'டி.என்., ரைஸ்' திட்டம் துவக்கம்
ADDED : ஜூலை 03, 2024 01:43 AM
சென்னை:மகளிரை தொழில் முனைவோராக மாற்றவும், அவர்களுக்கான நிதி சந்தைகள், தொழில் தொடர்புகள் போன்றவற்றை எளிதாக்கும் வகையிலும், 'டி.என்.ரைஸ்' என்ற புதிய திட்டத்தை, அமைச்சர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்.
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 'டி.என்., ரைஸ்' என்ற திட்டம், அதற்கான லோகோ மற்றும் இணையதளத்தை, அமைச்சர் உதயநிதி, சென்னையில் நேற்று துவக்கி வைத்தார்.
பல திட்டங்கள்
பின், அவர் பேசியதாவது:
மகளிர் சுயஉதவி குழுக்கள், தற்போது லட்சக்கணக்கான பெண்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளன. மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மகளிர் மேம்பாட்டுக்கான, 'வாழ்ந்து காட்டுவோம் - 2.0' திட்டம், பல பெண்களை ஊக்குவித்து வருகிறது.
மகளிர் வேலைக்கு செல்கின்றனர் என்ற நிலையை மாற்றி, அவர்கள் பலருக்கு வேலை தரும் வகையில், பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் பெண்களால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களில், 13.5 சதவீதம் தமிழகத்தில் இருப்பது பெருமையே.
இந்த வெற்றியின் மேலும் ஒரு மைல் கல்லாக, 'டி.என்., ரைஸ்' என்ற நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோராக விரும்பும் மகளிருக்கு, எல்லா வகையிலும் இந்த நிறுவனம் உதவி செய்யும்.
ஆலோசனை
ஏற்கனவே தேர்வான, 126 மகளிர் தொழில் முனைவோர், 80 மகளிர் தொழில் குழுக்கள் நடத்தும் நிறுவனங்கள், அடுத்த கட்டத்திற்கு வளர, இந்த நிறுவனம் வாயிலாக ஆலோசனை வழங்கப்படும்.
ஆண்டுதோறும் மகளிர் தொழில் முனைவோர், மகளிர் குழு நிறுவனங்கள் பயன்பெறும்.
தொழில் முனைவோருக்கு வழிகாட்டவும், தேவையான உதவிகளை வழங்கவும், உலகளவில் புகழ் பெற்ற பிளிப்கார்ட், எச்.பி., - எஸ்.ஐ.சி.சி.எல்., ஸ்டார்ட் அப் தமிழ்நாடு என, பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையழுத்தாகியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், ஊரக வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குனர் திவ்யதர்சினி, செயல் இயக்குனர் ஸ்ரேயா சிங், உலக வங்கியின் பணி தலைவர் சமிக் சுந்தர் தாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.