/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/போக்குவரத்து நெருக்கடி! சர்குலர் பஸ்கள் இயக்கப்படுமா?போக்குவரத்து நெருக்கடி! சர்குலர் பஸ்கள் இயக்கப்படுமா?
போக்குவரத்து நெருக்கடி! சர்குலர் பஸ்கள் இயக்கப்படுமா?
போக்குவரத்து நெருக்கடி! சர்குலர் பஸ்கள் இயக்கப்படுமா?
போக்குவரத்து நெருக்கடி! சர்குலர் பஸ்கள் இயக்கப்படுமா?
ADDED : மார் 16, 2025 06:49 AM

அதிகரித்து வரும் மக்கள் தொகையால் நகரங்களில் குடியிருப்புகள் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து விளைநிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறிவருகிறது.
இதனால் புதிய குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் நகர் பகுதிக்கு வந்து செல்ல போதிய பஸ் வசதி இல்லாமல் டூவீலர்களை பயன்படுத்துவதால் நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.
இதனால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க தற்போது நகரின் வெளியில் புதிய பஸ் ஸ்டாண்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்கால போக்குவரத்து நெருக்கடிகளை கருத்தில் கொண்டு பெரும்பாலான நகரங்களில் நான்கு வழிச்சாலையில் புதிய பஸ் ஸ்டாண்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரையில் தற்போது அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட்டுகள் உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துாரில் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. சிவகாசியில் பழைய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சாத்துாரில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கலாம்.
தற்போதைய சூழலில் அருப்புக்கோட்டையில் மட்டுமே புதிய பஸ் ஸ்டாண்ட் சிறப்பாக செயல்படுகிறது.
ஆனாலும் மதுரையில் இருந்து துாத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் பஸ்கள் நகருக்குள் வந்து செல்வதில்லை.
விருதுநகரில் தற்போது தான் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டுக்கு வரத் துவங்கியுள்ளது. ராஜபாளையம் புதிய பஸ் ஸ்டாண்ட்டிற்கு டவுன் பஸ்கள் வந்து செல்லாத நிலை தான் உள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் ஒவ்வொரு நகர், கிராமங்களில் வசிக்கும் மக்கள் புதிய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 3 கி.மீ.தூரத்திற்கு 2 பஸ்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. அதிலும் இரவு 9:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை
ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து தான் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனை தவிர்க்க ஒவ்வொரு நகரத்திலும் புதிய பஸ் ஸ்டாண்ட்டுகளில் இருந்து அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், கோயில்கள், பள்ளி கல்லூரிகளை இணைக்கும் வகையில் சர்குலர் பஸ்கள் இயக்கினால் மட்டுமே மக்கள் எளிதில் புதிய பஸ் ஸ்டாண்ட்டுகளுக்கு வந்து செல்ல முடியும். அவை வெற்றிகரமாகவும், முழுமையாகவும் இயங்கும்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து புறப்பட்டு ரயில்வே ஸ்டேஷன், தாலுகா மற்றும் நகராட்சி அலுவலகம், கீழரதவீதி, சர்ச் சந்திப்பு, பழைய பஸ் ஸ்டாண்ட், ஆத்துக்கடை, இடையபொட்டல் தெரு, நல்லகுற்றாலபுரம், ரைட்டன்பட்டி, குலாலர் தெரு, ஆத்துக்கடை, காமராஜர் சிலை, பெரிய மாரியம்மன் கோயில், சர்ச் சந்திப்பு வழியாக மீண்டும் புதிய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும் வகையில் சர்குலர் பஸ்கள் இயக்க வேண்டும்.
ராஜபாளையத்தில் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு சங்கரன்கோவில் முக்கு, காந்தி கலை மன்றம், சாந்தி தியேட்டர், காந்தி சிலை ரவுண்டானா,
தாலுகா அலுவலகம், நீதிமன்றம், மாடசாமி கோயில் தெரு, பஞ்சு மார்கெட், டி.பி.கே.ரோடு, மலையடிபட்டி, பி.எஸ்.கே.நகர் மேம்பாலம், சங்கரன்கோவில் முக்கு வழியாக மீண்டும் புதிய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும் வகையில் சர்குலர் பஸ்கள் இயக்க வேண்டும்.
சிவகாசியில் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு மணி நகர், சித்துராஜபுரம் சந்திப்பு, விளாம்பட்டி ரோடு சந்திப்பு, தண்ணீர் தொட்டி, பிள்ளையார் கோயில், சாட்சியாபுரம் ரோடு, அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன், எஸ்.எப்.ஆர். காலேஜ் சந்திப்பு, பழனியாண்டவர் தியேட்டர், ரத்தின விலாஸ் பஸ் ஸ்டாப், பைபாஸ் ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும் வகையில் சர்குலர் பஸ்கள் இயக்க வேண்டும்.
விருதுநகரில் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு எம்.ஜி.ஆர்.சிலை, ஆத்துபாலம், பழைய பஸ் ஸ்டாண்ட், புல்லலக்கோட்டை ரோடு, தாலுகா ஆபிஸ் சர்வீஸ் ரோடு, மேம்பாலம் வழியாக பி.ஆர்.சி. டிப்போ, ஸ்டேட் பாங்க், ரயில்வே ஸ்டேஷன், ராமமூர்த்தி ரோடு, அரசு மருத்துவமனை, அல்லம்பட்டி முக்கு ரோடு, மீண்டும் எம்.ஜி.ஆர்.சிலை வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும் வகையில் சர்குலர் பஸ்கள் இயக்க வேண்டும்.
அருப்புக்கோட்டையில் புதிய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து புறப்பட்டு பாலையம் பட்டி, நான்கு வழிச்சாலை வழியாக காந்தி நகர் பஸ் ஸ்டாப், பந்தல்குடி சுற்றுச்சாலை சந்திப்பு, அரசு மருத்துவமனை, மார்கெட் பஜார் வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும் வகையில் சர்குலர் பஸ்கள் இயக்கவேண்டும்.
இவ்வாறு சர்குலர் பஸ்கள் இயக்க பட்டால் மாவட்டத்தில் உள்ள அனைத்து புதிய பஸ் ஸ்டாண்டுகள் முழு அளவில் வெற்றிகரமாக இயங்கும்.
இதற்கு மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.