ADDED : ஜூன் 11, 2025 07:08 AM

காரியாபட்டி : காரியாபட்டி ஆத்திகுளத்தில் பள்ளி அருகே வளர்ந்துள்ள சம்பை செடிகளிலிருந்து காற்றில் பரவி வரும் தூசிகளால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
காரியாபட்டி ஆத்திகுளத்தில் பள்ளி அருகே சம்பை செடிகள் வளர்ந்துள்ளன. அதன் அருகே ஊர் மக்கள் கூடும் மந்தை, நாடக மேடை, சுகாதார வளாகம், குடிநீர் குழாய் உள்ளன. புழக்கத்திற்கான தண்ணீர் எடுக்க, துணி துவைக்க, குளிக்க என எப்போதும் மக்கள் புழக்கம் இருக்கும். கழிவு நீர் வெளியேற வழி இல்லாததால், சுகாதார வளாகம் அருகே தேங்கி நிற்கும். இதில் சம்பை செடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கின்றன. விஷப் பூச்சிகள் தங்கி வருவதோடு, அடிக்கடி குடியிருப்புகளுக்குள் சென்று வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சம்பைச் செடியிலிருந்து பஞ்சு போன்ற துாசுகள் காற்றில் பரவுகின்றன. சுவாசிக்க முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். உணவுப் பொருள்களில் விழுகின்றன.
இதனால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.