Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மின் மோட்டார் மூலம் குடிநீர் திருடுவதால் திண்டாட்டம்; மேடான பகுதிகளுக்கு கிடைக்காததால் தவிப்பு

மின் மோட்டார் மூலம் குடிநீர் திருடுவதால் திண்டாட்டம்; மேடான பகுதிகளுக்கு கிடைக்காததால் தவிப்பு

மின் மோட்டார் மூலம் குடிநீர் திருடுவதால் திண்டாட்டம்; மேடான பகுதிகளுக்கு கிடைக்காததால் தவிப்பு

மின் மோட்டார் மூலம் குடிநீர் திருடுவதால் திண்டாட்டம்; மேடான பகுதிகளுக்கு கிடைக்காததால் தவிப்பு

UPDATED : செப் 10, 2025 08:46 AMADDED : செப் 10, 2025 01:59 AM


Google News
Latest Tamil News
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், சாத்தூர் உள்ளிட்ட ஊர்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அருப்புக்கோட்டையில் தாமிரபரணி திட்டம் 1, 2 மூலமாகவும், வைகை குடிநீர் திட்ட மூலமாகவும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் இருந்து தாமிரபரணி குடிநீர் 160 கி.மீ., கடந்து குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. இது தவிர உள்ளூர் நீர் நிலைகளை பயன்படுத்தி குடிநீர் வழங்கப்படுகிறது. கிராமப் பகுதிகளுக்கும் தாமிரபரணி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இருப்பினும் மாவட்டத்தின் பல ஊர்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. மக்கள் குடிநீருக்காக குடத்துடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் விநியோகம் செய்யும்போது நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் மோட்டார் வைத்து குடிநீரை திருடுகின்றனர். இதனால் மின் மோட்டார் பயன்படுத்தாத வீடுகளில் குடிநீர் வருவது குறைந்து போகிறது. சில வீடுகளில் வருவதே இல்லை. மேலும் மேடான பகுதிகளில் சுத்தமாக குடிநீர் வருவதே இல்லை. இது பல ஆண்டுகளாக பிரச்சனையாகவே உள்ளது.

குடிநீர் பிடிக்க மின் மோட்டாரை பயன்படுத்தக்கூடாது என உள்ளாட்சி நிர்வாகத்தினர் அவ்வப்போது அறிவித்தும், பறிமுதல் செய்தும் கூட மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடுவது அதிகரித்து உள்ளது. அருப்புக்கோட்டையின் பல பகுதிகளில் வீடுகள், வணிக பயன்பாட்டிற்கு இணைப்பு பெற்றவர்களும் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடுகின்றனர். இதனால் மேடான பகுதிகளுக்கு குடிநீர் வருவதில்லை.

மின் மோட்டாரை பயன்படுத்தி குடிநீர் திருடுவது நகர் பகுதிகளில் மட்டுமல்லாமல் தற்போது, கிராம பகுதிகளிலும் இதை பின்பற்றி தண்ணீர் பிடிப்பதால், பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நகராட்சி பகுதிகளில் மின் மோட்டார்களை பயன்படுத்துவது நகராட்சிக்கு தெரிந்தும் கண்டு கொள்வதில்லை. அருப்புக்கோட்டை அருகே ஆமணக்கு நத்தம் பகுதியில் மின் மோட்டாரை பயன்படுத்தி குடிநீர் பிடிப்பதால் மேடான பகுதிகளுக்கு குடிநீர் வருவதில்லை என, 4 நாட்களுக்கு முன்பு குருந்தமடம் ரோடு பகுதியைச் சேர்ந்த மக்கள் மறியல் செய்துள்ளனர்.

இதே போன்று பல கிராமங்களில் இந்த பிரச்சனை தொடர்கிறது. நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மின் மோட்டார் பயன்படுத்தி குடிநீர் பிடிப்பதை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது. அடிக்கடி ஆய்வு செய்து மின் மோட்டார்களை பறிமுதல் செய்தும் மின் இணைப்புகளை துண்டிப்பதும் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் மேடான பகுதிகளுக்கு குடிநீர் வருவதற்குரிய பணிகளைச் செய்ய வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us