ADDED : மே 27, 2025 12:33 AM
சேத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக தேவதானம் பகுதியில் தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே சேத்துார் அடுத்த தேவதானம் சாஸ்தா கோயில் நீர் தேக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பெரியகுளம், நகர குளம், வாண்டையார் குளம், சேர்வராயன் குளம் உள்ளிட்ட கண்மாய்கள் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் சாகுபடி நடைபெறுகிறது.
15 நாட்களுக்கு முன் தொடங்கி இப்பகுதியில் அறுவடை பணிகள் வேகம் எடுத்துள்ள நிலையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்காததால் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் நேற்று தேவதானம், கோவிலுார், சேத்துார், முகவூர் ஆகிய நான்கு இடங்களில் நேரடி கொள்முதல் நிலையத்தை மண்டல அலுவலர் பால்பாண்டி திறந்து வைத்தார். இதில் சன்னரக நெல் கிலோ ரூ.24.50ம் மோட்டா ரகத்திற்கு ரூ. 23.05 வழங்கப்படுகிறது. இதனால் தனியார் வியாபாரிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு விற்கும் நிர்பந்தம் தவிர்க்கப்பட்டது.
அத்துடன் நெல்லுக்கான தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்பதால் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.