/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கண்மாயில் கழிவுநீர் கலப்பது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை கண்மாயில் கழிவுநீர் கலப்பது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
கண்மாயில் கழிவுநீர் கலப்பது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
கண்மாயில் கழிவுநீர் கலப்பது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
கண்மாயில் கழிவுநீர் கலப்பது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
ADDED : ஜூன் 18, 2025 04:09 AM

சிவகாசி: ராஜபாளையம் நகராட்சி கழிவுநீர் இடையன்குளம் கண்மாயில் கலப்பது குறித்து ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக, சிவகாசியில் நடந்த கோட்டஅளவிலான குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
சிவகாசி சப் கலெக்டர் அலுவலகத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, சிவகாசி தாலுகாக்களுக்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம்
அம்மையப்பன், வேப்பங்குளம்: ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா பிள்ளையார்குளம் வருவாய் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதி இன்றி செம்மண் மற்றும் சரளை மண் அள்ளப்படுவதாக கலெக்டரிடம் புகார் அளித்தேன். பிள்ளையார்குளம் வி.ஏ.ஓ, தலையாரி ஆகியோர் நேரில் வந்த போது மண் அள்ளிய இடம் மற்றும் கொட்டிய இடத்தை காண்பித்தேன். இந்நிலையில் மண் கடத்தல் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு எனக்கு சம்மன் அளித்துள்ளனர். கனிமவள கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்த என்னை மிரட்டும் வகையில் செயல்படும் வருவாய்த்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சப் கலெக்டர்: நீங்கள் விசாரணைக்கு செல்ல வேண்டாம், அனுமதி இன்றி மணல் அள்ளுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமச்சந்திரராஜா, ராஜபாளையம்: பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மா விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பழக்கூழ் தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மையப்பன், சேத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க, சோலார் அதிர்வு மின்வேலி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலகணேஷ், மம்சாபுரம்: செண்பகத்தோப்பு பேயனாற்றின் குறுக்கே தனிநபர் சார்பில் குழாய் பதிக்கப்பட்டுள்ளதால் நீரோட்டம் தடைபட்டு ஐந்து கண்மாய்கள் நீர்வரத்து குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
நாகு, மம்சாபுரம்: ராஜபாளையம் நகராட்சியில் சேகரமாகும் கழிவு நீர் நேரடியாக இடையன்குளம் கண்மாயில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது. மேலும் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து ஒன்றரை ஆண்டுகளாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தொடர்ந்து புகார் அளிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த காலங்களில் கோட்ட அளவிலான குறைதீர் கூட்டத்தில் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொள்வர். ஆனால் தற்போது அதிகாரிகளுக்கு பதில், பெயரளவுக்கு கீழ் நிலை அதிகாரிகளை மட்டுமே அனுப்பி வைப்பதால், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைப்பதில்லை என அனைத்து விவசாயிகளும் புகார் தெரிவித்தனர். இவ்வாறு விவாதம் நடந்தது.