Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சகி சேவை மையத்தில் பெண்களை தங்க வைக்கும் நாட்கள் அதிகரிப்பு: குடும்ப வன்முறையால் பாதித்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்

சகி சேவை மையத்தில் பெண்களை தங்க வைக்கும் நாட்கள் அதிகரிப்பு: குடும்ப வன்முறையால் பாதித்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்

சகி சேவை மையத்தில் பெண்களை தங்க வைக்கும் நாட்கள் அதிகரிப்பு: குடும்ப வன்முறையால் பாதித்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்

சகி சேவை மையத்தில் பெண்களை தங்க வைக்கும் நாட்கள் அதிகரிப்பு: குடும்ப வன்முறையால் பாதித்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்

ADDED : செப் 06, 2025 04:45 AM


Google News
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை சகி சேவை மையத்தில் 5 நாட்கள் வரை இருந்த தற்காலிக தங்க வைக்கும் நடவடிக்கையை 10 நாட்கள் வரை மத்திய அரசு அதிகரித்துள்ள நிலையில், துயரில் அடைக்கலம் தரும் இது பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவிக் கரம் நீட்ட அரசு தோற்றுவித்த அமைப்பே பெண்களுக்கான சகி - ஒருங்கிணைந்த சேவை மையம். பெண்கள், குழந்தைகள் வளர்ச்சிக்கான மத்திய அமைச்சகம், தேசிய அளவில் எல்லா மாநிலங்களிலும், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் அமைப்பதற்காக நிர்பயா நிதியிலிருந்து பணம் ஒதுக்கியுள்ளது. இதற்கான 'சகி' எனும் திட்டம் 2015ல் அமலுக்கு வந்தது. இதன் செயல்பாடுகளை மாநில அரசு நிர்வகிக்கிறது.

வெளியிலோ, வீட்டிலோ வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அவசரக் கால உதவி, மீட்பு நடவடிக்கைகள், மருத்துவ சேவைகள், எப்.ஐ.ஆர்., பதிவது போன்ற போலீஸ்துறை சார்ந்த உதவிகள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ரீதியான கவுன்சலிங் உதவிகள், சட்ட ஆலோசனை, சட்ட உதவிகள், பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தற்காலிகத் தங்கும் வசதிகள், நீண்ட கால தங்கும் விடுதிகளைக் கண்டறிவது போன்ற அனைத்து விதமான உதவிகளையும் இங்கு செய்கின்றனர்.

மாவட்டத்தில் 2019 முதல் தனி கட்டடத்தில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வருகிறது. குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை தாக்குதல், கடத்தல், புகைப்படங்களை வைத்து மிரட்டும் சைபர் குற்றங்கள், கட்டாய திருமணம், போதை, மதுவால் பாதிப்பு, வேறு வகையான வன்முறைகள், மிரட்டுதல், மனரீதியான துன்புறுத்துதல் உள்ளிட்ட 19 வகையான பிரச்னைகள் பெண்களை பாதிக்கின்றன.

இந்த 19 வகையான பாதிப்புகளில் எதுவாக இருந்தாலும் உடனடியாக 181க்கு அழைத்தால் பெண்களுக்கு தீர்வு காணப்படும். சில நேரங்களில் என்ன செய்வது, எங்குச் செல்வது, தன் மீதான வன்முறையை எப்படி எதிர்ப்பது, யாரிடம் உதவி கோருவது என வழி தெரியாது தவித்துப் போகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களை 5 நாட்கள் வரை தங்க வைக்கலாம் என்றிருந்த விதியை நீட்டிப்பு செய்து தற்போது 10 நாட்கள் வரை தங்க வைக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே அவசர கால அடைக்கலம் தரும் இந்த சேவை நீட்டிப்பு பற்றி கிராமப்புற பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us