Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஆக்கிரமிப்பு, கழிவு, குப்பை தேக்கம், துர்நாற்றம்

ஆக்கிரமிப்பு, கழிவு, குப்பை தேக்கம், துர்நாற்றம்

ஆக்கிரமிப்பு, கழிவு, குப்பை தேக்கம், துர்நாற்றம்

ஆக்கிரமிப்பு, கழிவு, குப்பை தேக்கம், துர்நாற்றம்

ADDED : ஜன 04, 2024 01:48 AM


Google News
அருப்புக்கோட்டை; கழிவு நீர் கலந்தும், பாசம் பிடித்தும் குப்பைகள் கொட்டப்பட்டும் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் அருப்புக்கோட்டை தும்பைகுளம் கண்மாய் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

அருப்புக்கோட்டை அருகே கஞ்ச நாயக்கன் பட்டியிலிருந்து வெள்ளக்கோட்டை பகுதி வரை, 27 ஏக்கர் பரப்பில் கண்மாய் அமைந்துள்ளது.

இதைச் சுற்றியுள்ள ராமசாமிபுரம் கஞ்சநாயக்கன்பட்டி பகுதிகள் பாசன வசதி பெற்றனர். ஒரு காலத்தில் இரு போக விவசாயம் நடந்தது, அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் குடிநீர் வினியோகத்திற்காக கண்மாயில் போர்வெல் அமைத்து குடிநீர் எடுக்கப்பட்டு நகரில் வினியோகம் செய்யப்பட்டது.

இந்த கண்மாயின் தண்ணீர் நன்கு சுவையாக இருப்பதால் குடிநீருக்கும் பயிர்கள் நன்கு வளர்வதற்கும் ஏற்ற வகையில் தண்ணீர் இருந்தது. கண்மாயை ஒட்டியுள்ள ஆயிரக்கணக்கான வீடுகளின் போர்வெல்களில் நிலத்தடி நீர் நன்கு ஊறி, தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்தது. கஞ்சநாயக்கன்பட்டி கிராமம் முழுவதும் தண்ணீர் நன்கு கிடைத்து வந்தது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமங்களில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு நகர் முழுவதும் தனியார் குடிநீரை விலைக்கு விற்று வந்தனர்.

நாளடைவில் கண்மாய் பராமரிப்பின்றி போனது. கண்மாயின் ஒரு பகுதி சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. கண்மாய் முழுவதும் சீமை கருவேலம் மரங்கள் வளர்ந்துள்ளது.

அருப்புக்கோட்டை நகரின் ஒரு பகுதி கழிவுநீர் தும்பைகுளம் கண்மாயில் தான் சேர்கிறது. கண்மாய்க்கு வரும் நீர்வரத்து வாறுகால்கள் பராமரிப்பு இன்றியும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் மழை நீர்வரத்து குறைந்து போனது.

கண்மாயில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள், ஆகாய தாமரைகள் இருப்பதால் எவ்வளவு மழை பெய்து தண்ணீர் தேங்கினாலும் பாசம் பிடித்து தண்ணீர் கெட்டுவிடுகிறது. இந்த தண்ணீரில் குளித்தால் அரிப்பு ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர். விவசாயத்திற்கும் ஏற்ற வகையில் இல்லை என்கின்றனர்.

கண்மாயை தூர் வாராமல் விட்டதால் ஆழம் குறைந்து போனது. கரைகள் பராமரிப்பு இன்றி பலமின்றி உள்ளது. கண்மாயில் கட்டட கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. ஆகாய தாமரைகள் தேங்கியுள்ள தண்ணீரை வேகமாக உறுஞ்சி விடுகின்றன.

இந்தக் கண்மாய் நகராட்சி, ஊராட்சி கட்டுப்பாட்டில் இருக்கிறதா என இரு துறைகளுக்கும் தெரியவில்லை.

இதனால் யார் பராமரிப்பது என தெரியாமல் அப்படியே விட்டுவிட்டனர். நகரில் முக்கியமான பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தும்பை குளம் கண்மாயை பராமரிப்பு செய்யாமல், அடுத்த மாவட்டத்தில் இருந்து 100 கி.மீ., தூரத்தில் இருந்து குழாய் மூலம் தண்ணீரை கொண்டு வந்து நகரில் வினியோகம் செய்கின்றனர்.

உள்ளூர் நீர்நிலைகளை பராமரிப்பதில் அக்கறை கொள்வது இல்லை. இந்த கண்மாயை முறைப்படி பராமரித்து மழை நீரை சேகரித்தால் நகரின் 2 பகுதிகளின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கலாம். அரசு தான் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயம் செய்ய முடியல


சகாதேவன், விவசாயி: ஒரு காலத்தில் தும்பைகுளம் கண்மாய் தண்ணீர் மூலம் இருபோக விவசாயம் நடந்தது. தற்போது கண்மாயில் தண்ணீர் இருந்தும் பயன்படுத்த முடியவில்லை. கண்மாயில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்பட்டு தண்ணீர் கெட்டு விட்டது. கனமழையில் கண்மாய் நிறைந்தும் பயன் இல்லை.

குறைந்து போன கால்நடை வளர்ப்பு


பாலமுருகன், விவசாயி: தும்பைகுளம் கண்மாய் தண்ணீர் ஒரு காலத்தில் நன்கு சுவையாக இருக்கும். சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள் ஆடுகள், மாடுகள் நன்கு வளர்த்து வந்தனர்.

கால்நடைகள் இந்த கண்மாய் தண்ணீரை நன்கு குடிக்கும். தற்போது தண்ணீர் கெட்டு விட்டதால் வேறு வழியின்றி கால்நடைகள் வளர்ப்பு படிப்படியாக குறைந்து போனது. கண்மாயை தூர்வாரி சுத்தமான மழை நீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காணாமல் போன ஓடைகள்


ஜெயலட்சுமி, விவசாயி: தும்பை குளம் கண்மாய் தண்ணீர் மூலம் 45 ஆண்டுகளாக நன்கு விவசாயம் செய்து வந்தோம். கண்மாயை பராமரிப்பு செய்யாமல் விட்டதால் மழை நீர் வரத்து ஓடைகள், கண்மாய் மடைகள் சேதமடைந்தும் காணாமலும் போய்விட்டன.

விவசாய நிலங்களுக்கு முறையாக தண்ணீர் வருவது இல்லை. கண்மாயில் நீர் நிறைந்தும் விவசாயிகளுக்கு பயனில்லை. கண்மாய் நீர் கெட்டுவிட்டது. குளித்தால் அரிப்பு ஏற்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us