ADDED : மே 29, 2025 01:42 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் சுற்றித்திரிந்த யானைகள் கூட்டம் தற்போது கேரள வனப்பகுதிக்கு சென்று விட்டதால், கணக்கெடுப்பின் போது அதிகளவில் யானைகள் தென்படாததால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.
இப்பகுதியில் மே 23 முதல் 25 வரை 3 நாட்கள் யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்துள்ளது. மலைப்பகுதியில் கன மழை பெய்து வந்ததால் தன்னார்வலர்கள் அனுமதிக்கப்படாமல் வனத்துறையினர் மட்டுமே கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.
இதில் யானைகளை நேரடியாக பார்த்தல், கால் தடம், எச்சம், நீர் நிலைகளில் தண்ணீர் அருந்துதல் உட்பட பல்வேறு தரவுகளின் அடிப்படையில் யானைகளை கணக்கிட்டனர்.
நேற்று முன்தினம் தாங்கள் சேகரித்த தரவுகளை அந்தந்த வனசரகங்களில் கணக்கெடுப்பாளர்கள் ஒப்படைத்தனர்.
இதில் பெரும்பாலான இடங்களில் யானைகள் அதிக அளவில் தென்படவில்லை எனவும், தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் கேரளா வனப் பகுதிக்குள் யானைகள் சென்றிருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.