ADDED : ஜன 11, 2024 05:07 AM
ராஜபாளையம் : பருவ மழை தொடர்ந்து செய்து வரும் நிலையில் கண்மாய்கள் மறுகால் பாய்ந்து வருகிறது. உடைப்புக்கு முன் கண்மாயை திறப்பதில் மீன் குத்தகைதாரர்கள், நீர்ப்பாசன விவசாயிகள் இடையே சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக பெய்து வரும் மழையால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து கண்மாய்கள் நிரம்பி வழிகிறது.
பெரும்பாலான கண்மாய்களின் கரைகள் தொடர் மழையால் போதிய பலமின்றி உள்ள நிலையில் அதிக நீர்வரத்தை முன்னிட்டு உபரி நீரை திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்மாய் நீர்ப்பாசன சங்கத்தினரிடம் அறிவுறுத்துகின்றனர்.
இந்நிலையில் மீன் பிடிக்காக பல லட்சம் செலவு செய்து மீன் குஞ்சுகளை கண்மாய்களில் விட்டு பாதுகாத்து வரும் மீன் குத்தகைதாரர்கள் தண்ணீரை வெளியேற்ற மனமின்றி உள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாசன விவசாய சங்கத்தினர் சிக்கலில் உள்ளனர்.
இது குறித்து புளியங்குளம் பாசன விவசாய சங்க தலைவர் தர்ம கிருஷ்ணராஜா: தொடர் மழையினால் கண்மாய் கரைகள் கசிவு ஏற்பட்டு பலம் இழந்துள்ளது. வரத்து அதிகரிக்கும்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்ற தகவல் தெரிவிக்கின்றனர். மீன் குத்தகைதாரர்கள் மீன் குஞ்சுகள் வெளியேறிவிடும் என்பதால் மடை அருகே ஏற்கனவே வலை போட்டு தடுத்துள்ளனர்.
இதில் ஆகாய தாமரை உள்ளிட்டவை அடைத்து கரைகளை மேலும் பலவீனப்படுத்துகிறது. ஒருபுறம் கண்மாயை உடைப்பிலிருந்து காக்க வேண்டும். பொதுப்பணித்துறையினரின் அறிவுறுத்தலையும் நிறைவேற்ற வேண்டும் என்பதால் மீன் குத்தகைதாரர்களுடன் தேவையற்ற மனக் கசப்பு ஏற்பட்டு வருகிறது.