ADDED : செப் 15, 2025 05:53 AM

காரியாபட்டி, : காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் நுழைவு, வெளி வாயில்களில் ஆபத்தான பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் சென்று வர சிரமம் ஏற்பட்டு வருகிறது.
காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் ரூ.பல லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, கூடுதல் பஸ்கள் நின்று செல்லும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸ் உள்ளே நுழையும் இடத்திலும், வெளியில் வரும் இடத்திலும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் வாகனங்கள் சென்று வந்ததில் அதிக பள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் குலுங்கி செல்கின்றன. பஸ்சில் பயணிக்கும் பயணிகள் முட்டி, மோதி பாதிக்கப்படுகின்றனர்.
வாகன ஓட்டிகள் அந்த இடத்தை கடக்க படாத பாடு படுகின்றனர். இதனால் வாகனங்கள் சென்றுவர பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் பயணிகள் நடந்து செல்லும் போது இடறி விழுகின்றனர். மழை நேரத்தில் மழை நீர் தேங்கி பள்ளம் இருப்பது தெரியாமல் பலர் தட்டு தடுமாறி நடந்து செல்லும் சூழ்நிலை உள்ளது. விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.