/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காரியாபட்டியில் வெள்ளரி விவசாயம் அமோகம் காரியாபட்டியில் வெள்ளரி விவசாயம் அமோகம்
காரியாபட்டியில் வெள்ளரி விவசாயம் அமோகம்
காரியாபட்டியில் வெள்ளரி விவசாயம் அமோகம்
காரியாபட்டியில் வெள்ளரி விவசாயம் அமோகம்
ADDED : மார் 21, 2025 06:09 AM

காரியாபட்டி : காரியாபட்டி பகுதியில் கோடைகால பயிரான வெள்ளரி விவசாயம் அமோகமாக நடைபெற்று வருகிறது. சீசன் என்பதால் நல்ல விளைச்சல், விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெளியில் தலை காட்ட முடியவில்லை. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது, மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர். வெயிலிலிருந்து தப்பிக்க பல்வேறு வகையான குளிர்பானங்களை அருந்துகின்றனர். அப்படி இருந்தும் உடல் உஷ்ணத்தால் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் கோடையில் உடல் சூட்டை தணிக்க, அதற்கு ஏற்ற பழ வகைகள், தர்பூசணி, வெள்ளரி, இளநீர் விளைச்சல் செய்யப்பட்டு அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் வெள்ளரி முக்கிய பங்கு வகிக்கிறது.
காரியாபட்டி ஆவியூர், அரசகுளம், குரண்டி, கே. ஆலங்குளம், அ.முக்குளம், எஸ். மரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் தோட்ட விவசாயமாக வெள்ளரி பயிரிட்டுள்ளனர். நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. தற்போது சீசன் என்பதால் நல்ல கிராக்கி இருந்து வருகிறது. நல்ல விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பாண்டியம்மாள், விவசாயி, கே. ஆலங்குளம்: வெள்ளரி பயிரிட்ட 25 நாட்களில் பூ பூத்து பிஞ்சு விட ஆரம்பித்து விடும். வாரத்திற்கு 2 முறை தண்ணீர் விட்டால் போதும். களை மட்டும் அண்ட விடக்கூடாது. 2, 3 முறை உரம் தெளித்தால் போதும். நல்ல விளைச்சல் ஏற்படும். அதிகபட்சம் ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை செலவு ஏற்படும். சீசன் நேரத்தில் தினமும் 30 முதல் 40 கிலோ வரை வெள்ளரி பிஞ்சு பறிக்கப்படும். மதுரை மார்க்கெட் கொண்டு சென்று கிலோ ரூ. 50 விற்கப்படுகிறது.
சில நேரங்களில் வியாபாரிகள் நேரடியாக தோட்டத்திற்கு வந்து எண்ணிக்கை கணக்கில் வாங்கி செல்வர். 40 நாட்களுக்கு பலன் கொடுக்கும். சீசனில் ரூ. 80 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். கை மேல் பலன் கொடுப்பதால் மற்ற விவசாயத்திற்கு ஏற்படும் செலவுகளை இது சரி கட்டும். தற்போது நல்ல விளைச்சல் ஏற்பட்டு, நல்ல விலைக்கு விற்கப்படுவதால் மகிழ்ச்சியாக உள்ளது, என்றார்.