Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/காவிரி -- குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற எதிர்பார்ப்பு: தவிக்கும் திருச்சுழி தொகுதி விவசாயிகள்

காவிரி -- குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற எதிர்பார்ப்பு: தவிக்கும் திருச்சுழி தொகுதி விவசாயிகள்

காவிரி -- குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற எதிர்பார்ப்பு: தவிக்கும் திருச்சுழி தொகுதி விவசாயிகள்

காவிரி -- குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற எதிர்பார்ப்பு: தவிக்கும் திருச்சுழி தொகுதி விவசாயிகள்

ADDED : ஜன 29, 2024 05:01 AM


Google News
மாவட்டத்தில் மிகவும் வறட்சியான பின்தங்கிய பகுதியாக நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி உள்ளன. முழுக்க விவசாயம் சார்ந்த பகுதிகள். மழை பொழிவு இருந்தால் மட்டுமே விவசாயம் நடைபெறும். 10, 15 ஆண்டுகளாக சரி வர மழை இல்லை. விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் நீர் ஆதாரத்தை ஏற்படுத்தினால் மட்டுமே விவசாயத்தை தொடர முடியும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்தது.

ரூ.14 ஆயிரத்து 200 கோடி நிதி தேவைப்படுவதாக அறியப்பட்டது. ரூ. 7 ஆயிரத்து 100 கோடி நபார்டு வங்கி வழங்குவதாக உத்தரவாதம் அளித்து, இத்திட்டம் தொடங்கப்பட்டது. கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து புதுக்கோட்டை வரை ஒரு பகுதியாகவும், புதுக்கோட்டையிலிருந்து மானாமதுரை வரை 2வது பகுதியாகவும், மானாமதுரையிலிருந்து காரியாபட்டி பி.புதுப்பட்டி 3வது பகுதியாகவும் பிரிக்கப்பட்டது. முதல் கட்ட பணிகளுக்கு ரூ.800 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்றன. அதற்கு பின் போதிய நிதி ஒதுக்காததால் 2, 3ம் கட்ட பகுதிகள் கிடப்பில் போடப்பட்டன.

பல்வேறு போராட்டங்களுக்கு பின் ரூ. 290 கோடி நிதி ஒதுக்கி, நிலங்களை ஆர்ஜிதம் செய்ய அரசு உத்தரவிட்டது. அதன் பின் கால்வாய் வரக்கூடிய பகுதிகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டது. எந்த ஒரு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் தென்பகுதிகளான 7 மாவட்டங்கள் பயன்பெற்றிருக்கும். குடிநீர் பிரச்னை தீரும். விவசாயம் செழித்திருக்கும். கால்நடைகள் வளர்க்க முடியும். தென்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் விவசாயத்தை காக்க, தேவையான நிதி ஒதுக்கி, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மச்சேஸ்வரன், மாநிலத் துணைத் தலைவர், காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாய சங்கம், கட்டனூர்:

இத்திட்டம் தென் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கனவு. மிகவும் பின்தங்கிய பகுதியான திருச்சுழி தொகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நிலங்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டு காலதாமதப்படுத்தி வருவதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். காலதாமதம் ஏற்படுமேயானால் பத்திரப்பதிவுக்காக விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். அரசு தேவையான நிதியை ஒதுக்கி இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us