Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அடைபட்ட தரைப்பாலம்; அடிப்படை வசதியில்லாமல் சிரமம்

அடைபட்ட தரைப்பாலம்; அடிப்படை வசதியில்லாமல் சிரமம்

அடைபட்ட தரைப்பாலம்; அடிப்படை வசதியில்லாமல் சிரமம்

அடைபட்ட தரைப்பாலம்; அடிப்படை வசதியில்லாமல் சிரமம்

ADDED : செப் 10, 2025 01:59 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அத்திகுளம் அருந்ததியர் காலனியில் அடைபட்டு கிடக்கும் தரைப்பாலத்தில் மழை நேரத்தில் தண்ணீர் சூழ்ந்து வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை, சுகாதார வளாகமின்றி அவதி, வாறுகால் இருந்தும் ரோடு போடாத நிலை, புதிய குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் இணைப்புகள் கிடைக்காமல் சிரமம் என பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர் அப்பகுதி மக்கள்.

இது குறித்து அப்பகுதி குடியிருப்பாளர்கள் இருளப்பன், பழனிச்சாமி, வைரமுத்து, குருசாமி, முத்து ஆகியோர் கூறியதாவது; காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில் எங்கள் பகுதிக்கு குடியிருப்பு பட்டா வழங்கி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. தற்போது 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். அத்திகுளம் ரோட்டில் இருந்து எங்கள் குடியிருப்பு பகுதிக்கு வருவதற்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடையில் ஒரு தரைப்பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

தற்போது அந்த நீர்வரத்து ஓடையில் செடி, கொடிகள் வளர்ந்தும், கழிவுகள் கொட்டப்பட்டு புதர் மண்டி கிடக்கிறது. பாலத்தின் கண்கள் அடைப்பட்டு கனமழை பெய்தால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. இதனால் விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வந்துவிடுகிறது. ஏதேனும் விபத்து ஏற்பட்டு விடுமோ என அச்சத்துடன் வசித்து வருகிறோம்.

இந்த தரைப்பாலத்தை அகற்றிவிட்டு இருபுறமும் தடுப்பு சுவர்கள் கட்டி மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என பலமுறை ஊராட்சி ஒன்றியம், கலெக்டர் அலுவலகம், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகங்களுக்கு மனு அனுப்பியும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. இப்பகுதியில் வசிக்கும் ஆண், பெண்களுக்கு சுகாதார வளாக வசதி இல்லாததால் அத்திகுளம் கண்மாயை தான் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறோம். இதனால் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, சுகாதார வளாகம் கட்டி தர வேண்டும்.

அத்திகுளம் தெய்வேந்திரி கண்மாய் கரை ரோட்டை தான் நாங்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகிறோம். இந்த ரோடு பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் மண்மேவி காணப்படுவதால் மழை நேரங்களில் சகதி ஏற்பட்டு நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. வாரம் ஒரு நாள் மட்டுமே தாமிரபரணி குடிநீர் கிடைக்கிறது. இதனை டிரம்களில் சேகரித்து பயன்படுத்துகிறோம். எனவே குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு ஒரு முறையாவது குடிநீர் வழங்க வேண்டும்.

கோவிந்தன் நகர் தெருக்களில் வாறுகால், ரோடு வசதி இல்லாத நிலை உள்ளது. இங்கு பேவர் ப்ளாக் ரோடு அமைத்து தர வேண்டும். 3வது தெருவில் புதிய குடியிருப்பு களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும். எங்களின் பொது பயன்பாட்டிற்கு ஒரு சமுதாயக்கூடம், சிறுவர்கள் விளையாட்டு பூங்கா கட்டித் தர வேண்டும். அனைத்து தெருக்களிலும் போதுமான அளவிற்கு மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.

இங்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுத்து நாங்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் சிரமங்களை தீர்க்க வேண்டும், என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us