/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/புறநகர்பகுதிகளில் அடிப்படை வசதிகள் தேவைபுறநகர்பகுதிகளில் அடிப்படை வசதிகள் தேவை
புறநகர்பகுதிகளில் அடிப்படை வசதிகள் தேவை
புறநகர்பகுதிகளில் அடிப்படை வசதிகள் தேவை
புறநகர்பகுதிகளில் அடிப்படை வசதிகள் தேவை
ADDED : ஜன 03, 2024 05:36 AM

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 450 ஊராட்சிகள் என உள்ளன.
இவற்றில் பல புறநகர் பகுதிகள் 25, 30 ஆண்டுகளுக்கு முன்பே உருவாகிவிட்டன. இன்னமும் புறநகர் பகுதிகள் உருவாகி கொண்டு இருக்கின்றன. ஆண்டுகள் பல கடந்த போதிலும் புறநகர் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து தரப்படவில்லை.
ஒவ்வொரு நகராட்சியிலும் ஊராட்சியிலும் உட்பட்ட புறநகர் பகுதிகள் பெரும்பாலானவை எந்தவித வசதிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படுகின்றன.
ரோடு, வாறுகால், குடிநீர், தெரு விளக்கு இவற்றை ஆண்டு கணக்கில் போராடித்தான் பெற வேண்டியுள்ளது. அதிலும் அரைகுறையான வசதிகள் தான் செய்யப்படுகிறது. ஆண்டு கணக்கில் இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பிரச்சனைகளை எதிர்நோக்கி கொண்டே தான் உள்ளனர்.
அரசு ஒதுக்கும் சிறப்பு நிதி, பொது நிதிகளை ஏற்கனவே வசதிகள் செய்த பகுதிகளுக்கே நிதியை செலவிடுகின்றனர்.
கடமைக்கு ஒரு சில புறநகர் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்தாலும் அவை தரமற்ற பணிகளாகவே உள்ளன. பல புறநகர் பகுதிகளுக்கு ரோடு வசதி இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு செல்கின்றனர்.
தற்போது பெய்த தொடர் கனமழையில் பெரும்பாலான புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தும், வீடுகளில் புகுந்தும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
ரோடுகள் இல்லாமல் சேறும், சகதியுமாக நடக்க முடியாதபடி உள்ளது. வாறுகால் கழிவுநீர் வீடுகள் முன்பு தேங்கி கிடக்கிறது. குடிநீர் இல்லாமல் அவதிப்பட வேண்டி இருக்கிறது.
ரோடுகள் மோசமாக இருப்பதால் தனியார் குடிநீர் வண்டிகள் வருவது இல்லை. கனமழை புறநகர் பகுதி மக்களின் வாழ்க்கைய புரட்டி போட்டு விட்டது.
அருப்புக்கோட்டையில் நகராட்சிக்குட்பட்ட சுப்புராஜ்நகர், ஜெயகாந்தன் நகர், நாகலிங்கநகர், திருநகர் உட்பட பகுதிகள், ஊராட்சிகளுக்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள ஜெயநகர், ஆதிதிராவிடர் காலனி, பாலையம்பட்டியில் உள்ள அக்கம்மாள் நகர் உட்பட புறநகர் பகுதிகள் இன்னமும் வெள்ளக்காடாக உள்ளது.
மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். அரசு இயந்திரம் இந்த பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர்.
புறநகர் பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகள், வாறுகால் கட்டமைப்பு, முறையான ரோடுகள், இருபுறமும் வாறுகால் போன்றவற்றை அமைத்தால் தான் பேரிடர் காலங்களில் மக்கள் சிரமப்படாமல் இருக்க முடியும்.
அதை விட்டு விட்டு, வெள்ளம் சூழ்ந்த காலங்களில் கடமைக்கு உணவு பொட்டலங்களை கொடுப்பது, அவசரத்திற்கு ரோட்டில் மண்னை அள்ளி போடுவது போன்றவை பயன் தராது.
இவற்றை தவிர்த்து புறநகர் பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உரிய காலத்தில் சம்பந்தப்பட்ட நகராட்சிகள், ஊராட்சிகள் செய்து தர வேண்டும்.