/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விபத்து நிவாரண உதவி பெற விழிப்புணர்வு தேவைவிபத்து நிவாரண உதவி பெற விழிப்புணர்வு தேவை
விபத்து நிவாரண உதவி பெற விழிப்புணர்வு தேவை
விபத்து நிவாரண உதவி பெற விழிப்புணர்வு தேவை
விபத்து நிவாரண உதவி பெற விழிப்புணர்வு தேவை
ADDED : மே 31, 2025 11:28 PM
விருதுநகர் மாவட்டத்தில் விவசாயம், பட்டாசு, நெசவு உட்பட பல்வேறு தொழில்களில் பல லட்சம் மக்கள் தினக்கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கி, தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குடும்பத் தலைவர் ஒருவரின் வருமானத்தை நம்பியே அவரது மனைவி, குழந்தைகள், பெற்றோர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நலன் காக்க உயிரை பணயம் வைத்து ஏராளமானோர் குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காலம் முதல் டூவீலர்களில் வேலைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. இதனால் தினமும் மாவட்டத்தில் சாலைகளில் விபத்துக்கள் ஏற்பட்டு காயம், கொடுங்காயம், மரணம் என்ற நிலைக்கு பலர் ஆளாகிவருகின்றனர்.
இந்த மாதிரி விபத்துகளில் சிக்குபவர்கள் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில் முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி அளிக்கப்படுகிறது. காயத்திற்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையிலும், உயிரிழப்பிற்கு ரூ.1லட்சம் வரையிலும் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
இதற்கு சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலே காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை தானாகவே அழைத்து நிவாரண உதவிகளை பெற்றுத்தர உதவி செய்கின்றனர்.
ஆனால், இது குறித்து விழிப்புணர்வு பெரும்பாலான மக்களுக்கு இல்லாததால் அரசு வழங்கும் நிவாரண உதவியை பெற்று தருவதற்கு காவல் துறையில் மனுக்கள் அளிப்பதில்லை. அவர்களிடம் இருந்து மனுக்களை பெற காவல்துறையினர் மிகுந்த சிரமத்திற்கு ஆட்பட வேண்டிய நிலை உள்ளது.
மிகப்பெரிய பட்டாசு விபத்துக்கள், வாகன விபத்துகளின் போது பலர் உயிர்இழந்தால் மட்டுமே உடனடியாக முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து நிவாரண தொகை வழங்கப்படுகிறது. ஆனால், மற்றைய சாதாரண விபத்துகளில் மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் விபத்தில் சிக்குபவர் குடும்பத்தினர் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், கிராமப்புற மக்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
இதற்காக நகர் பகுதிகளில் ஒவ்வொரு தெருக்களிலும், ஊராட்சிகளில் குக்கிராமங்களிலும் இதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.