ADDED : ஜூன் 14, 2024 04:15 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நித்திய கல்யாணி செடியினால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் பூசாரிப்பட்டி, காக்கி வாடன்பட்டி, குண்டாயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் முக்கிய சாகுபடியாக இருக்கும் நிலையில் இந்தப் பயிர்கள் அறுவடைக்கு பின்னர் நித்திய கல்யாணி முக்கிய சாகுபடியாக உள்ளது. இப்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட ஏக்கரில் நித்திய கல்யாணி பயிரிடப்பட்டு வருகிறது.
குறுகிய கால பயிரான இச்செடியில் பாதிக்குப் பாதி லாபம் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வமுடன் பயிரிடுகின்றனர். மோட்டார் பாசனத்தில் ஜன., ல் பயிரிடப்பட்ட இச்செடி தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.
ஒரு ஏக்கருக்கு உழவு, களை எடுத்தல் என ரூ. 30 முதல் 35 ஆயிரம் வரை செலவாகிறது. இச்செடியை வேரோடு பிடுங்கி காய வைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
ஒரு கிலோ ரூ. 60 முதல் 65 என ஒரு ஏக்கருக்கு ஒரு டன் வரை கிடைத்த செடி ரூ. 60 ஆயிரம் வரை விலை போகிறது. இதனால் இப்பயிரில் கூடுதல் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதன் அறுவடை முடிந்தவுடன் விவசாயிகள் மீண்டும் சோளம் போன்ற பயிர்களுக்கு மாறிவிடுவர்.