ADDED : பிப் 10, 2024 04:26 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் அகலப்பாதையாக மாற்றப்பட்ட பிறகு போதுமான ரயில்கள், வசதிகள் இல்லாமல் பயணிகள் தவிக்கின்றனர்.
அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் 1964 ல், அன்றைய முதல்வர் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்ட பெருமை பெற்றது.
பின்னர், அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. குடிநீர், கழிப்பறை வசதிகள், நடைமேடை உட்பட வசதிகள் செய்யப்பட்டது.
சிலம்பு எக்ஸ்பிரஸ், செங்கோட்டை - சென்னை ரயில் என, 2 ரயில்கள் வாரத்தில் 6 நாட்கள் இயங்குகின்றன. அருப்புக்கோட்டையில் இருந்து சென்னைக்கு தினமும் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து செல்கின்றனர். போதுமான ரயில்கள் இல்லாததால், டிக்கட் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
பிரச்னை
அருப்புக்கோட்டை வழியாக 2 ரயில்கள் மட்டும் செல்வதால் பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தட்கல் திட்டத்திலும் குளறுபடிகள் உள்ளது. ஸ்டேஷனில் போதுமான வசதிகள் இல்லை.
தினமும் 200க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் இந்த ஸ்டேஷனில் கழிப்பறைகள் மூடியே கிடக்கிறது.
மேலும் ஸ்டேஷனில் குறிப்பிட்ட அளவிற்கு தான் கூரை உள்ளது. இதைத் தாண்டி ரயில் பெட்டிகள் நிற்பதால், மழை காலங்களில் மேற்கூரை இல்லாமல் நனைந்தபடியே தான் பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது.
மின் விளக்கு வசதியின்றி இருட்டில் தான் பயணிகள் நிற்க வேண்டியுள்ளது. ஸ்டேஷனை சுற்றி காம்பவுண்ட் வசதி இல்லாததால், பொதுமக்கள் வாக்கிங் செல்ல ஸ்டேஷனுக்கு வருகின்றனர்.
கூடுதல் ரயில் வேண்டும்
தனலட்சுமி, சீனியர் சிட்டிசன்: எனது குடும்பம் சென்னையில் இருப்பதால் நான் அடிக்கடி ரயிலில் சென்னை செல்வேன். அருப்புக்கோட்டை இருந்து சென்னை செல்ல போதுமான ரயில்கள் இல்லை. கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்.
மூத்த பயணிகளுக்கான சலுகைகள் தர வேண்டும். தட்கல் முறையில் வழங்கப்படும் டிக்கெட்டுகளை ஒழுங்குபடுத்த வேண்டும். வயதானவர்களுக்கான கோட்டா வை அதிகப்படுத்த வேண்டும்.
வசதிகள் இல்லை
முருகன், ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனையாளர்: அருப்புக்கோட்டையில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு வியாபார நிமித்தமாக செல்கின்றனர். ரயில்களில் அருப்புக்கோட்டைக்கு என முன்பதிவுகளை அதிகப்படுத்த வேண்டும்.
அருப்புக்கோட்டை ஸ்டேஷனில் கழிப்பறைகள் இருந்தும் பராமரிப்பு இன்றி மூடப்பட்டுள்ளது. இங்கு வரும் ரயில்கள் ஸ்டேஷன் கடைசியில் நிற்பதால், அந்த பகுதியில் மேற்கூரை, மின் விளக்கு வசதிகள் இல்லை. இரவு நேரத்தில் பெண்கள் இருட்டில் நிற்க பயப்படுகின்றனர். மழை காலத்தில் மேற்கூரையின்றி நனைந்து கொண்டே ரயில் ஏற வேண்டியுள்ளது.