/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இடித்ததோடு சரி புதிய கட்டட பணிகள் துவங்கவில்லை இடித்ததோடு சரி புதிய கட்டட பணிகள் துவங்கவில்லை
இடித்ததோடு சரி புதிய கட்டட பணிகள் துவங்கவில்லை
இடித்ததோடு சரி புதிய கட்டட பணிகள் துவங்கவில்லை
இடித்ததோடு சரி புதிய கட்டட பணிகள் துவங்கவில்லை
ADDED : ஜூலை 28, 2024 04:16 AM

விருதுநகர், : விருதுநகரில் மதுரை ரோட்டில் சப் ஜெயில் அருகே செயல்பட்டு வந்த கோட்டைப்பட்டி, விருதுநகர் டவுன், முத்துராமன்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகங்கள் இடிக்கப்பட்ட நிலையில் அவை வெவ்வேறு இடங்களில் வாடகை கட்டடங்களில் செயல்படுகின்றன. மாவட்ட அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் வசம் வருவாய்த்துறை இருந்தும் மூன்று ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை புதிய கட்டட பணிகள் துவங்கவில்லை. மக்கள் அலைக்கழிப்பும், மாற்றுத்திறனாளிகளின் பரிதவிப்பும் தொடர்கதையாக உள்ளது.
விருதுநகர் மதுரை ரோட்டில் சப் ஜெயில் அருகே கோட்டைப்பட்டி, விருதுநகர் டவுன், முத்துராமன்பட்டி ஆகிய வி.ஏ.ஓ., அலுவலகங்கள் ஒரே இடத்தில் செயல்பட்டு வந்தன. இந்த மூன்று பகுதிகளுமே நகராட்சியையும், அதை யொட்டியுமே இருப்பதால் ஒரே இடத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்தை எளிதில் வந்து மக்கள் வருவாய் தொடர்பான சான்று பெற்று வந்தனர்.
இந்நிலையில் 2020ல் இறுதியில் மழைக்காலத்தில் இந்த வி.ஏ.ஓ., கட்டடங்களின் கூரையில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியது. இது பலம் வாய்ந்த பழைய காலத்து கட்டடம். கூரையில் மட்டும் வேலை செய்திருந்தால் கட்டடத்தை முழுதாக இடிக்க தேவை இருந்திருக்காது. உறுதி தன்மையோடே இருந்ததாக அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.
இந்நிலையில் இதை இடித்து முடிக்கவே சில நாட்கள் ஆனது. இந்நிலையில் இந்த வி.ஏ.ஓ., அலுவலகங்கள் அந்தந்த எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடமாற்றம் செய்யப்பட்டன. கோட்டைப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் மாலை பேட்டை தெருவிலும், விருதுநகர் டவுன் அலுவலகம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும், முத்துராமன்பட்டி அலுவலகம் அல்லம்பட்டியிலும் வாடகை கட்டடங்களில் இடமாற்றம் ஆனது. இந்த மூன்று அலுவலங்களின் எல்லை மக்களுக்கு அடிக்கடி குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் மக்கள் எங்கே செல்வது என தெரியாமல் அடிக்கடி தடுமாறினர்.
விவரம் தெரிந்தவர்களை தவிர சாமானிய படிப்பறிவு இல்லாத மக்களுக்கு இது அலைக்கழிப்பை தான் தற்போது வரை ஏற்படுத்தி வருகிறது. இந்த மூன்று வி.ஏ.ஓ., அலுவலகங்களும் தற்போது வாடகை கட்டடத்தில் உள்ள நிலையில் இதற்கான வாடகை பணத்தை அரசு வழங்காமல் அந்தந்த வி.ஏ.ஓ.,க்களே வழங்கி வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
மேலும் தற்போது வரை விருதுநகர் டவுன் வி.ஏ.ஓ., அலுவலகம் மாடியில் செயல்பட்டு வருகிறது. இதனால் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிதில் சென்று வர முடிவதில்லை. மேலே ஏற முடியாமல் பலர் தவிக்கின்றனர். அருகே தனியார் பார் இருப்பதாலும் சிலர் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.
அமைச்சரும் ,மாவட்ட நிர்வாகமும் இந்த மூன்று வி.ஏ.ஓ., அலுவலகங்களை ஒருங்கிணைத்து முன்பு இருந்தது போல் கட்ட வேண்டும். இல்லையெனில் அந்தந்த எல்லைப்பகுதியில் தங்கள் சொந்த கட்டடத்தில் கட்ட வேண்டும். அதுவரையில்மாடிக்கட்டடத்தில் வாடகைக்கு வைப்பதை தவிர்த்து தரைத்தள வீடுகளில் வாடகைக்கு அமர்த்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சாத்துார் ஆர்.டி.ஓ., சிவக்குமார் கூறியதாவது: சேதமடைந்த வி.ஏ.ஓ., அலுவலகங்களை சீரமைக்கவும், இடிக்கப்பட்டவற்றில் புதிய கட்டடங்கள் கட்டவும் திட்ட வரைவு அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.
இது தொடர்பாக 2022ல் குறைதீர் நாளில் மனு அளித்தேன். அப்போதே முன்மொழிவுகள் அனுப்பப்பட்டதாக எனக்கு பதில் கூறியிருந்தனர். ஆனால் தற்போது வரை கட்டாமல் உள்ளனர். இதனால் நாளுக்கு நாள் மக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். மாடியில் உள்ள அலுவலகத்தால் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்படுகின்றனர். தேவையான நடவடிக்கை எடுத்து விரைந்து கட்டி மூன்று வி.ஏ.ஓ., அலுவலகங்களையும் சொந்த கட்டடத்தில் செயல்பட வைக்க வேண்டும்.
- ஆறுமுக சக்திவேல், விருதுநகர்.