/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இல்லை... ஆனா இருக்கு; இது தான் விருதுநகர் பரிதாபம் இல்லை... ஆனா இருக்கு; இது தான் விருதுநகர் பரிதாபம்
இல்லை... ஆனா இருக்கு; இது தான் விருதுநகர் பரிதாபம்
இல்லை... ஆனா இருக்கு; இது தான் விருதுநகர் பரிதாபம்
இல்லை... ஆனா இருக்கு; இது தான் விருதுநகர் பரிதாபம்
ADDED : ஜூலை 03, 2024 05:32 AM

விருதுநகர் : விருதுநகர் நகராட்சியில் சமுதாய கூடம் இருந்தும் அக்கட்டடம் பராமரிப்பு பற்றி தகவல் உரிமை சட்டத்தில் கேட்டதற்கு அப்படி ஒரு கட்டடமே இல்லை என பொறுப்பில்லாமல் பதில் கூறிய நகராட்சி பொது தகவல் அலுவலரால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களின் சுப நிகழ்ச்சிகளை நடத்த கிராமப்பகுதிகளில் துவங்கி பேரூராட்சி பகுதிகள், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் சமுதாய கூடங்கள் கட்டப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களில் உள்ள சமுதாய கூடங்களில் சில கூட பயன்பாட்டில் உள்ளன. ஆனால் நகராட்சி பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்கள் முறையாக பராமரிக்கப்படுவதே கிடையாது.
நகர்ப்பகுதிகளில் திருமண மண்டபங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் மக்கள் வராமாட்டார்கள் என நினைத்து பராமரிப்பை கைவிட்டு விட்டனரோ என தெரியவில்லை.
விருதுநகர் நகராட்சி 15வது வார்டு விஸ்வநாததாஸ் காலனியில் ஒருங்கிணைந்த வீட்டு வசதி, குடிசை மேம்பாட்டு திட்டத்தில் 2008-09ல் சமுதாய கூடம் கட்டப்பட்டது.
துவக்கத்தில் செயல்பட்ட இந்த கூடம் நாளடைவில் செயல்படவில்லை. தற்போது ஆண்டுக்கணக்கில் முடங்கி உள்ளது. இதன் உட்பகுதி முழுவதும் குப்பை கூளமாக காணப்படுகிறது.
எந்த பராமரிப்பும் இல்லை. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த எட்வர்ட் ஜூன் 1ல் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் புனரமைப்பு, கூடத்தில் நடந்த சுபநிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் கொண்ட பதிவேடு தொடர்பாக நகராட்சியில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு விருதுநகர் நகராட்சி சார்பில் பொது தகவல் அலுவலர் 2008-09ல் ஒருங்கிணைந்த வீட்டு வசதி, குடிசை மேம்பாட்டு திட்டத்தில் சமுதாயக்கூடம் எதுவும் கட்டப்படவில்லை என ஜூன் 25ல் பதில் அளித்துள்ளனர்.
இத்தனைக்கும் இந்த கட்டடம் தற்போது வரை உறுதியான நிலையில் உள்ளது.
ஆனால் நகராட்சி அதிகாரிகளோ அப்படி ஒரு கட்டடமே இல்லை என பதில் அளித்துள்ளனர்.
இது தான் நகராட்சி பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்களின் நிலையாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதை கண்காணிக்க வேண்டும்.
தவறுதலாக, அலட்சியமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் தரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகர்ப்பகுதி ஏழைகளின் நிலையை கருத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் நகராட்சி பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்களை செயல்படுத்த வேண்டும்.