மொய்யில் 'கைவைத்த' சகோதரிகள் கைது
மொய்யில் 'கைவைத்த' சகோதரிகள் கைது
மொய்யில் 'கைவைத்த' சகோதரிகள் கைது
ADDED : ஜூலை 11, 2024 12:04 AM

ஸ்ரீவில்லிபுத்துார்:மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து வாடகை காரில் வந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் திருமண வீட்டில் மொய் பணம் ரூ. 1.71லட்சத்தை திருடிய உசிலம்பட்டியை சேர்ந்த முத்துச்செல்வி 54, பாண்டியம்மாள் 42, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா கொத்தங்குளத்தை சேர்ந்த சமுத்திரகனி இல்ல திருமண விழா ஜூலை 7ல் வன்னியம்பட்டி விலக்கில் திருமண மண்டபத்தில் நடந்தது. திருமண வீட்டார் மொய் பணம் வசூலித்து கொண்டிருந்த நிலையில் டிப் டாப்பாக வந்த இரு பெண்கள், மொய் பணம் வசூலித்தவரிடம் ரூ. 500க்கு போட்டி போட்டு சில்லரை கேட்டுள்ளனர். மொய் வசூல் செய்தவர் குழப்பமடைந்த நிலையில் அவரது கவனத்தை திசை திருப்பி ரூ. 1 லட்சத்து 71 ஆயிரம் இருந்த பணப்பையை இருவரும் திருடி சென்றனர். அதிர்ச்சியடைந்த திருமண வீட்டார் உடனடியாக வன்னியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதலில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அயன் கோவில்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் மனைவி முத்துச்செல்வி,, அவரது தங்கை அமாவாசை மனைவி பாண்டியம்மாள் இருவரும் பணத்தை திருடியது தெரிந்தது.
உசிலம்பட்டியில் இருந்து ஒரு வாடகை காரில் திருமண மண்டபத்திற்கு வந்து மொய் பணத்தை திருடியுள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ. 1.71 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.