ADDED : ஜூலை 07, 2024 01:36 AM

சாத்துார்: சாத்துார் அருகே நென்மேனி கண்மாய்க்கு செல்லும் நீர் வரத்து கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதோடு, தண்ணீர் செல்வதும் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
நென்மேனி கண்மாய் மூலம் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது. பெரியகொல்லபட்டி வைப்பாறு ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து இந்த கண்மாய்க்கு நீர் வரும்படி வரத்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
பெரிய கொல்லப்பட்டி ஊராட்சி வழியாக வெட்டப்பட்டுள்ள நீர் வரத்து கால்வாயில் ஊராட்சி பகுதியில் சேகரமாகும் பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன.
இதனால் கண்மாய்க்கு செல்லும் தண்ணீர் மாசு அடைவதோடு அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்லுவதில் சிக்கலும் ஏற்படுகிறது. இறைச்சி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் காரணமாக கண்மாய்க்கு சொல்லும் தண்ணீர் மாசு அடைந்து காணப்படுவதோடு இந்தத் தண்ணீரை பயன்படுத்தும் விவசாயிகளும் தொற்று நோய்களுக்கு ஆளாகும் நிலை உள்ளது.
நீர் வரத்து கால்வாயில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதோடு கால்வாயில் ஏற்கனவே குவிந்து காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளையும் குப்பைகளையும் அகற்ற பொதுப்பணி துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நென்மேனி கண்மாய் பாசன விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.