Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிவகாசி மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்க முடிவு

சிவகாசி மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்க முடிவு

சிவகாசி மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்க முடிவு

சிவகாசி மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்க முடிவு

ADDED : ஜூன் 21, 2024 03:45 AM


Google News
சிவகாசி: சிவகாசி மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தும் வகையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 9 ஊராட்சிகளுடன் விளாம்பட்டி,, பூலாவூரணி ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் ,சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவர்குளம், சாமிநத்தம், செங்கமலநாச்சியார்புரம், ஆனையூர், சித்துராஜபுரம், விஸ்வநத்தம், அனுப்பன்குளம், பள்ளபட்டி, நாரணாபுரம் ஆகிய 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்த ஊராட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் பதவியில் இருப்பதால், முதற்கட்டமாக சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் மட்டும் இணைக்கப்பட்டு, 2021 அக். 21 முதல் மாநகராட்சி செயல்பாட்டுக்கு வந்தது. மாநகராட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2027 மார்ச் வரை உள்ளது. ஆனால் மாநகராட்சி உடன் இணைக்கப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் அடுத்த சில மாதங்களில் நிறைவு பெறும் நிலையில், 9 ஊராட்சிகளும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது.

அதன்பின் மாநகராட்சி மக்கள் தொகை 3.5 லட்சமாகவும், வார்டுகளின் எண்ணிக்கை 72 ஆகவும் உயரும். 9 ஊராட்சிகளையும் மாநகராட்சி உடன் இணைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நிறைவடைந்து, சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதி பெறப்பட்டு விட்டது. இந்நிலையில் சிவகாசி மாநகராட்சி வார்டு எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் கூடுதலாக விளாம்பட்டி, பூலாவூரணி ஊராட்சிகளை இணைப்பதற்கான திட்ட அறிக்கை அளிக்குமாறு நகராட்சி நிர்வாக இயக்குநரகம் உத்தரவிட்டது.

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, சிவகாசி மாநகராட்சியுடன் 9 ஊராட்சிகளை இணைப்பதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. தற்போது கூடுதலாக சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி, பூலாவூரணி ஊராட்சிகளையும் மாநகராட்சியுடன் இணைப்பதற்கான திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. புதிய மாநகராட்சி அலுவலகத்தில் 100 கவுன்சிலர்கள் அமரும் வகையில் கூட்ட அரங்கு கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மாநகராட்சி உடன் ஊராட்சிகளை இணைப்பதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது, என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us