ADDED : ஜூன் 17, 2024 12:10 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் மெயின் ரொடு ஓரங்களில் காய வைக்கப்படும் விவசாய பொருட்களின் கழிவுகள் எரியூட்டப்படுவதால் அருகில் சமூக ஆர்வலர்களால் வளர்க்கப்படும் மரங்கள் கருகி வீணாகின்றன. மாற்று வழிக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் கரும்பு, நெல், வாழை போன்ற பயிர்களில் நீர்வாய்ப்பு குறைவான பகுதிகளில் மானாவாரி பயிர்களான எள், உளுந்து, கம்பு போன்ற எண்ணெய் வித்துக்களை விளைவிக்கின்றனர்.
போதிய களம் இன்றி விவசாய பயிர்களை பிரித்து எடுப்பதற்காக கிராம சாலைகள், ரோட்டோர சாலைகளில் காய வைக்கின்றனர். பணி முடிந்தவுடன் விளை பொருட்களை மட்டும் எடுத்துவிட்டு கழிவுகளை ரோட்டோரம் குவித்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதால் கேட்பாரற்று கிடக்கும் இதன் மீது சிலர் தீ வைத்து இருக்கின்றனர்.
இதன் மூலம் சமூக ஆர்வலர்கள் இயற்கையால் பாதுகாத்து வளர்க்கப்பட்ட மரங்கள் தீயில் கருகி வீணாகிறது. வனத்துறை உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும்.
இது குறித்து விவசாயி கணேசன்: விவசாய கழிவுகள் காய வைத்து பிரித்து எடுக்க களம் தற்போதைய சூழலில் பராமரிப்பு இல்லாததால் ரோட்டோரங்களை பயன்படுத்துகின்றனர். கழிவுகளை விட்டுச் செல்லும் போது அடையாளம் தெரியாதவர்களால் கருகி வருவது தொடர்கிறது. விவசாய கழிவுகளை மாற்று பயன்பாட்டிற்கான முயற்சியில் வேளாண் துறைகள் ஈடுபடுவதோடு புதிய களம் ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் முயற்சிக்க வேண்டும்.