Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விதி மீறி டெபாசிட் வாங்கியதாக குற்றச்சாட்டு

விதி மீறி டெபாசிட் வாங்கியதாக குற்றச்சாட்டு

விதி மீறி டெபாசிட் வாங்கியதாக குற்றச்சாட்டு

விதி மீறி டெபாசிட் வாங்கியதாக குற்றச்சாட்டு

ADDED : ஜூலை 21, 2024 04:27 AM


Google News
Latest Tamil News
திருச்சுழி: திருச்சுழி அருகே தும்முசின்னம்பட்டியில் ஜல்ஜீவன் திட்டத்தில் அமைக்கப்பட்ட குழாய்களில் 8 மாதங்கள் ஆகியும் தண்ணீர் வராததால் மக்கள் உடைந்த குழாய்களில் வரும் தண்ணீரை பிடிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு உத்தரவை மீறி மக்களிடம் டெபாசிட் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது தும்மு சின்னம்பட்டி ஊராட்சி. இங்கு பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் நிலத்தடி நீரை குடிக்க பயன்படுத்தினர். இதனால் பலருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டது. பின்னர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்கத் திட்டமிடப்பட்டு 356 குழாய்கள் பதிக்க திட்டமிடப்பட்டது.

இத்திட்டத்தில் குழாய் பதிக்க ஒன்றிய குழு தலைவர் பொன்னுத்தம்பியின் உறவினர் விஜயா ஒப்பந்ததாரராக உள்ளார்். பணி முடிந்து 8 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் குழாயில் தண்ணீர் வரவில்லை. நாளடைவில் குழாய்கள் சேதம் அடைந்து விட்டன.

அப்பகுதி மக்கள் கூறுகையில், ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய்கள் பதித்து பல மாதங்கள் ஆகியும் தண்ணீர் வரவில்லை. இதில் டெபாசிட் தொகை வேறு கட்டியுள்ளோம். அதற்கான ரசீதும் வழங்கப்படவில்லை. ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது.

நல்ல குடிநீர் கிடைக்கும் என நம்பினோம். ஆனால் தண்ணீரே வரவில்லை. குடத்துடன் அலைகிறோம். வராத தண்ணீருக்கு பணத்தைக் கட்டி ஏமாந்து விட்டோம். என்றனர்.

தரமற்ற பணி


ராமலிங்கம், தலைவர், தும்மு சின்னம்பட்டி ஊராட்சி: ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 353 குடிநீர் இணைப்புகள் ரூ.27 லட்சத்தில் 9 மாதங்களுக்கு முன்பு பதிக்கப்பட்டது. ஒன்றிய குழு தலைவரின் உறவினர் ஒப்பந்ததாரராக பணியை செய்துள்ளார். மக்களின் பங்களிப்பு தொகையாக சிலரிடத்தில் ரூ. ஆயிரம், முதல் 2 ஆயிரம் வரை டெபாசிட்டாக வசூலித்துள்ளனர். வாங்கிய தொகையை ஊராட்சியில் ஒப்படைத்து ரசீது வாங்கி மக்களிடத்தில் கொடுக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. குழாய்கள் இணைப்புக்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு வீட்டில் 3 ஆதார் அட்டைகள் இருந்தால் 3 பேர் பேரிலும் இணைப்புகள் கொடுத்துள்ளனர். பல இடங்களில் குழாய்கள் சேதம் அடைந்திருக்கிறது. தேவையில்லாமல் காட்டு பகுதிகளில் வரிசையாக குழாய்களை பதித்துள்ளனர்.

ஊராட்சி நிர்வாகத்தை கேட்டு எதையும் செய்வது இல்லை. ஒன்றிய குழு தலைவரின் அறிவுறுத்தலின் படி தான் பணி நடக்கிறது.

குடிநீர் எப்போது வரும் என பி.டி.ஓ., அலுவலகத்திற்கு 5 மாதங்களாக நடையாய் நடக்கிறேன். எந்த பதிலும் இல்லை. ஆனால் பணி முடிந்ததாக என்னிடத்தில் பில்லில் கையெழுத்து கேட்டனர். நான் மறுத்து விட்டேன்.

முறையாக பணிகளை முடித்து குழாய்களில் தண்ணீர் வந்தால் தான் கையெழுத்து இடுவேன் என கூறினேன்.

நாங்கள் கலெக்டர் அலுவலகத்தில் பில்லை பாஸ் செய்து கொள்கிறோம் என, கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

எங்கள் ஊராட்சியில் மட்டுமல்ல இன்னும் சில ஊராட்சிகளில் ஒன்றிய குழு தலைவரின் உறவினர் வேலை எடுத்து செய்த பணியில் குழாய்கள் அனைத்திலும் தண்ணீர் வராமல் காட்சிப்பொருளாக உள்ளது.

பணிகள் முடிந்தால் தான் பில் பாஸ்


திருச்சுழி வட்டார வளர்ச்சி அலுவலர் புகழேந்தி: ஜல் ஜீவன் திட்டத்திற்கு மக்களிடம் டெபாசிட் தொகை வாங்க கூடாது. தும்மு சின்னம்பட்டியில் மக்களிடத்தில் டெபாசிட் தொகையை சேர்மனின் உறவினரான ஒப்பந்ததாரர் வசூலித்துள்ளார். தொகையை திருப்பித் தர கூறி அறிவுறுத்தி உள்ளேன்.

பணிகளை தரமாக முறையாக செய்து முழுமை அடைந்து, குழாய்களில் தண்ணீர் வந்தால்தான் பில் பாஸ் செய்யப்படும் என ஒன்றிய குழு தலைவரிடம் கூறியுள்ளேன்.

இன்னும் ஒரு வார காலத்திற்குள் தும்மு சின்னம்பட்டி கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் தண்ணீர் வரும்.

விஜயா, ஒப்பந்தகாரர்: ஜல் ஜீவன் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பங்களிப்பு 90 சதவிகிதம், மக்களின் பங்களிப்பு 10 சதவிகிதம். இதில் மக்களிடம் வாங்கப்பட்ட பங்களிப்பை ஊராட்சி கணக்கில் செலுத்தி விட்டோம். பணிகள் முடிக்கப்பட்டு, அதிகாரிகள் ஆய்வும் செய்து விட்டனர். திட்டம் முடிக்கப்பட்டு திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்படைத்து விட்டோம். குடிநீர் வருவதற்குரிய நடவடிக்கைகளை அலுவலகம் தான் எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us