ADDED : ஜூன் 17, 2024 12:08 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை மதுரை ரோடு சர்ச் அருகில் நடைபெறும் வாறுகால் பணி கிடப்பில் போடப்பட்டதால் கடைகளை திறக்க முடியாமல் வியாபாரிகள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள ரோட்டின் ஒரு பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் வாறுகால் கட்டும் பணியை செய்து வருகின்றனர். இதற்காக ரோட்டின் ஓரங்கள் தோண்டப்பட்டு காங்ரீட் தளம் அமைக்கப்பட்டு வாறுகால் அமைக்கப்படுகிறது.
சி.எஸ்.ஐ., சர்ச் அருகில் தற்போது வாறுகால் கட்டும் பணிக்காக தோண்டப்பட்டது. இதனால், இந்த பகுதியில் வர முடியாததால் கடைகாரர்கள் கடைகளை அடைத்து விட்டனர். 20 நாட்களாக பணி நடந்து வருகிறது. கடைகளுக்கும் வாறுகாலுக்கும் இடையே 2 அடி இடைவெளியில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதை மின் மோட்டார் வைத்து அகற்றி வந்தனர். மோட்டார் பழுதடைந்து போனதால் அப்படியே பணியை விட்டு விட்டு சென்று விட்டனர். கடந்த 15 நாட்களாக பணி நடக்காமல் இருப்பதால் கடைகளை திறக்க முடியாமல் கடைக்காரர்கள் அவதிப்படுகின்றனர். ஒரு சில கடைகள் திறந்து இருந்தாலும் கழிவுநீர், தேங்கி இருப்பதால் ஏற்படும் துர்நாற்றத்தால் கடைகளுக்குள் இருக்க முடியவில்லை என கூறுகின்றனர். வாறுகால் பணியை விரைவில் முடிக்கவும் கழிவு நீரை அகற்றவும் நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.