/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து 2 பேர் பலி; இருவர் படுகாயம் சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து 2 பேர் பலி; இருவர் படுகாயம்
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து 2 பேர் பலி; இருவர் படுகாயம்
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து 2 பேர் பலி; இருவர் படுகாயம்
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து 2 பேர் பலி; இருவர் படுகாயம்
ADDED : ஜூலை 10, 2024 02:21 AM

சிவகாசி:சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர். பெண் உட்பட இருவர் படுகாயம் அடைந்தனர்.
சிவகாசி சோலை காலனியை சேர்ந்தவர் முருகவேல் 58. இவருக்கு எம்.புதுப்பட்டி அருகே காளையார்குறிச்சியில் நாக்பூர் உரிமம் பெற்ற சுப்ரீம் பட்டாசு ஆலை உள்ளது. அதில் 108 அறைகள் உள்ளன. 117 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர்.
நேற்று காலை 9:30 மணியளவில் பட்டாசு கலவை அறையிலிருந்து மருந்துகளை தள்ளு வண்டியில் எடுத்துக்கொண்டு உற்பத்தி அறைக்கு தொழிலாளர்கள் இருவர் கொண்டு சென்றனர். அங்கு மருந்தினை எடுத்து வைக்கும் போது தவறி கீழே விழுந்ததில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அறையில் இருந்த சிதம்பராபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் 47, முத்து முருகன் 45, சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
சித்தமநாயக்கன்பட்டியை சேர்ந்த சரோஜா 55, செவலுாரை சேர்ந்த சங்கரவேல் 54, தீக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
சம்பவ இடத்தை சிவகாசி சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன், எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, ஏ.டி.எஸ்.பி., சூரியமூர்த்தி பார்வையிட்டனர். எம்.புதுப்பட்டி போலீசார் போர்மேன் ஓ.கோவில்பட்டியை சேர்ந்த குணசேகரன், மேலாளர் சிவகாசி பன்னீரை கைது செய்தனர். ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
சப் கலெக்டர் கூறுகையில், பட்டாசு ஆலை விதிமீறி இயங்குகிறதா என்பதை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் ஆய்வு நடந்து வருகின்றது. இந்த ஆலையில் நடந்த விபத்து குறித்து முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மருந்து கீழே விழுந்து வெடி சத்தம் கேட்டவுடன் மற்ற அறைகளில் பணிபுரிந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறினர். மேலும் வெடி விபத்தில் கட்டடம் சேதம் அடையாததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.