/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஆக்கிரமித்த ஆட்டோ ஸ்டேண்டுகள்... மாற்றப்படுமா? காந்தி சிலை அருகே மக்கள் அவதிஆக்கிரமித்த ஆட்டோ ஸ்டேண்டுகள்... மாற்றப்படுமா? காந்தி சிலை அருகே மக்கள் அவதி
ஆக்கிரமித்த ஆட்டோ ஸ்டேண்டுகள்... மாற்றப்படுமா? காந்தி சிலை அருகே மக்கள் அவதி
ஆக்கிரமித்த ஆட்டோ ஸ்டேண்டுகள்... மாற்றப்படுமா? காந்தி சிலை அருகே மக்கள் அவதி
ஆக்கிரமித்த ஆட்டோ ஸ்டேண்டுகள்... மாற்றப்படுமா? காந்தி சிலை அருகே மக்கள் அவதி
ADDED : ஜூன் 14, 2025 02:14 AM

திண்டிவனம்: திண்டிவனம் காந்தி சிலை அருகே உள்ள கல்லுாரி சாலை, ஆஸ்பிட்டல் சாலையில் இரு பக்கமும் ஆட்டோ ஸ்டேண்டு உள்ளதால், தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
திண்டிவனம் போக்குவரத்து போலீசில் போதுமான போலீசார் இல்லாததால், நகரின் முக்கிய சாலையான நேரு வீதி, காமாட்சி அம்மன் கோவில் வீதி, ராஜாஜி வீதி, மசூதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய கூடுதல் போலீசார் நியமிக்காமல் இருப்பது, பொது மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
நகரத்தின் மையப்பகுதியான காந்தி சிலை அருகே போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த கல்லுாரி சாலை, ஆஸ்பிட்டல் ரோடு உள்ளது. இதில் கல்லுாரி சாலையில் ஒரத்தி உள்ளிட்ட கிராமங்களுக்கும், கல்லுாரிக்கு செல்லும் பஸ்கள், தனியார் வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றது. இதேபோல் ஆஸ்பிட்டல் ரோடு வழியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அதிக அளவில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றது.
பிரதான 2 சாலையில் காந்தி சிலை அருகே இருபக்கமும் ஆட்டோ ஸ்டேண்டுகள் உள்ளது. கல்லுாரி சாலையில் ஒருபக்கம் முழுதும் ஆட்டோக்களை நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ளதால், அந்த வழியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. குறிப்பாக பள்ளி, கல்லுாரி நேரங்களில் டிராபிக் ஜாம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
ஆஸ்பிட்டல் சாலையில், 108 ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாத அளவிற்கு ஆட்டோக்களை நிறுத்தி வருவதால், சரியான நேரத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.
இதுமட்டுமின்றி காந்தி சிலைக்கு எதிரில் மெயின்ரோடு முனையில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. கல்லுாரி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர கடைகள் சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்டன. ஆனால் அந்த கடைகள் தற்போது மீண்டும் அதே இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திண்டிவனத்தில் டவுன் டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய கனகேஸ்வரி, காந்தி சிலை அருகே செயல்பட்டு வந்த ஆட்டோ ஸ்டாண்டை, வண்டிமேடு பகுதிக்கு மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தார். அப்போது ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனைக் கருத்தில் கொண்டு காந்தி சிலை பகுதியிலுள்ள ஆட்டோ ஸ்டாண்டை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வேறு பகுதிக்கு மாற்றம் செய்வதற்கு டவுன் டி.எஸ்.பி.,பிரகாஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நகர பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.