Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படுமா? நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் கவனிக்குமா

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படுமா? நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் கவனிக்குமா

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படுமா? நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் கவனிக்குமா

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படுமா? நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் கவனிக்குமா

ADDED : ஜூன் 07, 2024 06:36 AM


Google News
Latest Tamil News
திண்டிவனம்: திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட முக்கிய சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படாமல் உள்ளது. வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தற்காலிகமாக சாலைகளை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டிவனம் நகராட்சி யில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 268 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி பணி துவங்கியது.மூன்று ஆண்டுகளுக்குள், அதாவது 2023ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதிக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் காலக்கெடுவை தாண்டியும் இதுவரை பாதாள சாக்கடைக்கான பல பணிகள் முடிக்கப்படாமல் நீண்டு கொண்டே போகிறது.

நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் உந்து நிலையங்களிலிருந்து பைப் மூலம் கழிவுநீர், சலவாதி ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், மைக்ரோ கம்போசிங் மையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இதில் மைக்ரோ கம்போசிங் மைய பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது. இதேபோல் நகரத்தில், முக்கிய போக்குவரத்து சாலைகளான நேரு வீதி, காமாட்சியம்மன் கோவில் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, ராஜாஜி வீதி, புது மசூதி வீதி ஆகிய இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது.

இந்த இடங்களிலுள்ள நன்றாக இருந்த சாலைகள் எல்லாம், பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டு பணிகள் நடந்தது. இந்த சாலைகள் மீண்டும் சீரமைக்கப்படாமல், குண்டும், குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு படு மோசமாக உள்ளது. பழுதடைந்த சாலைகள் வழியாக வாகனங்கள் செல்லும் போது, புழுதி பறக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் தினந்தோறும் அவதியடைகின்றனர்.

இந்நிலையில் வரும் 10ம் தேதி ஆண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. திண்டிவனம் பகுதியில் பள்ளி மாணவர்களை நுாற்றுக்கணக்கான ஆட்டோக்கள் மூலம் அதிக அளவில் செல்கின்றனர். தற்போது பழுதடைந்துள்ள நேரு வீதி உள்ளிட்ட முக்கியமான போக்குவரத்து சாலைகளில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குண்டும், குழியுமான சாலையில் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது.

பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, திண்டிவனத்திலுள்ள முக்கியமான போக்குவரத்து சாலைகளை மட்டும், நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, தற்காலிகமாக வாகனங்கள் செல்லும் வகையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us