/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவாரா? சவால்நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவாரா? சவால்
நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவாரா? சவால்
நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவாரா? சவால்
நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவாரா? சவால்
ADDED : ஜூலை 17, 2024 12:11 AM
செஞ்சி : விழுப்புரம் மாவட்டத்தின் நீர் வளத்தை பெருக்க சாத்தனுார் அணையில் இருந்து நந்தன் கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான புதிய திட்டத்தை அரசு செயல்படுத்த விக்கிரவாண்டி தொகுதியில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விக்கிரவாண்டி தொகுதி புதிய எம்.எல்.ஏ.,வுக்கு...
நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முக்கியமான வாக்குறுதியாக இடம் பெற்றது நந்தன் கால்வாய் திட்டம்.
இந்த தேர்தலில் மட்டுமின்றி இதற்கு முன்பு நடந்த அனைத்து தேர்தல்களிலும் இந்த வாக்குறுதியை அனைத்து அரசியல் கட்சிகளும் தவறாமல் கொடுத்துள்ளனர். தேர்தல் முடிந்ததும் திட்டம் குறித்து முழுமையாக ஆய்வு செய்யாமல் நிதி ஒதுக்கி அறைகுறையாக பணிகளை செய்து வந்துள்ளனர்.
தற்போதுள்ள சூழ்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளுக்கு நாள் குடிநீர் தேவையும், விவசாயத்திற்கான தண்ணீர் தேவையும் அதிகரித்து வருகிறது.
இதை ஈடு செய்ய நந்தன் கால்வாய் திட்டத்தை விரிவுபடுத்தி சாத்தனுார் அணையில் இருந்து ஓலையாறு வழியாக சமுத்திரம் ஏரிக்குக்கு தண்ணீர் கொண்டு வந்து, அதில் இருந்து துறிஞ்சல் ஆற்றின் மூலம் நந்தன் கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு வருவதே சிறந்த தீர்வாக இருக்கும்.
இதன் மூலம் சாத்தனுார் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் உபரியாக வெளியேறி கடலில் கலக்கும் தண்ணீரை முழுமையாக விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஏரிகளுக்கு கொண்டுவர முடியும்.
கடந்த 1970ம் ஆண்டு துவங்கப்பட்ட நந்தன் கால்வாய் திட்டத்தில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு 2022ம் ஆண்டு முதன் முறையாக பொதுப்பணித் துறையினரும், நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினரும் இணைந்து கடை மடையான பனமலை ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்தனர்.
அடுத்த சில மாதங்களில் புதர் மண்டியும், மண் சரிந்தும் மீண்டும் தண்ணீர் வரும் வழிகளில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது தண்ணீர் வரவில்லை. அத்துடன் துறிஞ்சல் ஆற்றிலும் தற்போது தண்ணீர் இல்லை.
திருவண்ணாமலை மாவட்டம், கீரனுாரில் துறிஞ்சல் ஆற்றில் கட்டியுள்ள தடுப்பணையில் இருந்து நந்தன் கால்வாயில் தண்ணீர் வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை குறையும் ஆண்டில் துறிஞ்சல் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் நந்தன் கால்வாய்க்கு தண்ணீர் வருவதில்லை.
எனவே, சாத்தனுார் அணையில் இருந்து நந்தன் கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு வர 309 கோடி ரூபாய் மதிப்பில் தமிழக அரசு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என 3 ஆண்டுகளுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் இதுவரை நிதி ஒதுக்காமல் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர்.
தற்போது தொகுதியில் சவாலாக உள்ள இந்த நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான மிக முக்கிய பொறுப்பு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ., அன்னியூர் சிவாவிற்கு உள்ளது.
மழைக்காலம் துவங்கும் முன் அதிகாரிகளுடன் நந்தன் கால்வாயில் நேரடி கள ஆய்வு செய்து, தற்போதுள்ள தடைகளை தற்காலிகமாக சரி செய்து பனமலை ஏரிக்கு வடகிழக்கு பருவமழையின் போது தண்ணீர் கொண்டு வர முதல் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிரந்தர தீர்வாக சாத்தனுார் அணையில் இருந்து நந்தன் கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்கு நிதி ஒதுக்க முதல்வரிடம் தொடர்ந்து வலியுறுத்தி நிதியை பெற்று திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நந்தன் கால்வாய் பாசன விவசாயிகளும் பொது மக்களும் எதிர்பார்க்கின்றனர்.