Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நுாற்றாண்டு விழா கண்ட கொட்டியாம்பூண்டி அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை

நுாற்றாண்டு விழா கண்ட கொட்டியாம்பூண்டி அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை

நுாற்றாண்டு விழா கண்ட கொட்டியாம்பூண்டி அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை

நுாற்றாண்டு விழா கண்ட கொட்டியாம்பூண்டி அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை

ADDED : ஜூன் 29, 2025 12:20 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம், கொட்டியாம்பூண்டி கிராமத்தில், வயல்வெளிகள் சூழலில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி. இப்பள்ளி கடந்த 1923ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி துவங்கப்பட்டது.

ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை 73 மாணவியர்கள் உட்பட 127 பேர் படிக்கின்றனர். தற்போது தலைமை ஆசிரியர் பதவி காலியிடமாக உள்ளது. 3 பட்டதாரி ஆசிரியர்கள், 3 இடைநிலை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஒரு ஆங்கில ஆசிரியை என 7 பேர் பணிபுரிகின்றனர்.

பள்ளியில் 10 கம்ப்யூட்டர்களுடன் கணினி அறை உருவாக்கபட உள்ளது. இதனால் மாணவர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி பெறலாம். ஸ்மார்ட் 'டிவி'யுடன் கூடிய மூன்று வகுப்பறைகள் உள்ளது.

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கிராம மக்கள் பிளாஸ்டிக் சேர், டேபிள் வழங்கியுள்ளனர். ஆங்கில ஆசிரியை அகல்யாவின் ஆங்கில புலமை காரணமாக ஒன்றியத்தில் மற்ற பள்ளி ஆசிரியர்களின் ஆங்கில உச்சரிப்பு பயிற்சியை நடத்துவது பெருமைக்குரிய செய்தியாகும்.

கடந்த ஏப்ரல் மாதம் நுாற்றாண்டு விழா கொண்டாடிய போது, கிராம மக்கள் சார்பில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உபகரணங்கள், ஸ்மார்ட் 'டிவி', கணினி உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக டி.இ.ஓ., அருள் செல்வியிடம் வழங்கினர்.

மேலும், பள்ளி நுழைவு வாயில் அருகே திருவள்ளுவர் சிலை அமைத்து கொடுத்துள்ளனர்.

பள்ளியில், மாணவிகளின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலையாக சிலம்பம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மதிய உணவு இடைவேளையில் சாப்பிடுவதற்கு முன் மாணவர்களுக்கு எளிய யோகா பயிற்சி, தியானமும் கற்றுத்தருகின்றனர். மாலை வேளைகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை ஆசிரியர்களும் தன்னார்வலர்களும் நடத்துகின்றனர்.

பள்ளியில் அடிப்படை கற்றல் திறன் அதிகரிக்கும் காரணத்தால், 8ம் வகுப்பு முடித்து அருகில் உள்ள உயர் நிலைப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் அப்பள்ளிகளில் முதலிடத்தை பிடித்து வருவதாக அப்பகுதி கிராம மக்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.

அவ்வாறு முதலிடம் பிடிக்கும் மாணவர்களை நடுநிலைப் பள்ளிக்கு அழைத்து கவுரவப்படுத்தி பரிசு வழங்குகின்றனர்.

இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பல்வேறு அரசு பணிகளில் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர்.

பள்ளியின் முன்னாள் மாணவரும், அரசு பணி செய்து ஓய்வு பெற்று தற்போது சிங்கப்பூரில் வசிக்கும் ராமலிங்கம் என்பவர் பள்ளிக்காக 0.30 செண்ட் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கிராம மக்கள் ஒரு லட்சம் ரூபாய் முன் வைப்பு தொகையை செலுத்தியுள்ளனர். ஆனால், 18 ஆண்டுகளாக பள்ளியின் தரத்தை உயர்த்தி அரசு அறிவிக்காதது கிராம மக்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.

-ராமலிங்கம், முன்னாள் மாணவர், தொழிலதிபர். சிங்கப்பூர்.

இப்பள்ளியில் படித்தவர்தான்

எனது தொடக்க கல்வியை இப்பள்ளியில் தான் துவங்கினேன். இப்பள்ளிக்கு போதிய இடவசதி இல்லாததால் 0.30 செண்ட் நிலத்தை தானமாக வழங்கினேன். தற்போது சிங்கப்பூரில் ஜி.ஆர்.இம்பெக்ஸ் என்ற ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறேன். மாணவர்கள் கற்றலோடு, மனதையும், அறிவையும் நெறிபடுத்தி நல்வழியில் பயன்படுத்த உடற்பயிற்சி, யோகா போன்ற வகுப்புகளை இப்பள்ளியில் நடத்த அரசு முன்னெடுக்க வேண்டும். இப்பள்ளியில் படித்த எனது மகன் மணிகண்டன் இன்று சிங்கப்பூரில் தனியார் தொழிற்சாலை நடத்த கூடிய அளவிற்கு முன்னேறியுள்ளார் என்பதை பெருமையாக கருதுகிறேன்.



-பாக்கியராஜ், தாசில்தார், பள்ளியின் முன்னாள் மாணவர்.

அரசு பணியில் 80 பேர்

இந்த கிராமத்தை பொறுத்தவரை அடிப்படை கல்வியை கொடுக்க வேண்டும் , தங்களுடைய பிள்ளைகளை படிக்க வைத்து அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. இந்த பள்ளியில் பயின்று, இந்த சிறிய கிராமத்திலிருந்து என்னைப் போன்று 80 பேர் அரசு பணிகளில் இருக்கிறோம். இது பெருமை சேர்க்ககூடிய விஷயமாகும். இன்னும் அதிகமான மாணவர்கள் உயர்கல்வி கற்று அரசு பணிகளுக்கும், கலெக்டர், டாக்டர் போன்ற உயர் பதவிகளுக்கு செல்ல வேண்டும். இதன் மூலம் இந்த கிராமம் மேலும் வளர்ச்சி பெறும்.



- ஆனந்தன், கணக்கு அலுவலர், முன்னாள் மாணவர்.

இப்பள்ளியில் படித்தது பெருமை

நான் இப்பள்ளியில் படித்ததை பெருமையாக கருதுகிறேன். இன்று அரசு பணியில் உதவி இயக்குநர் நிலையில் பணி செய்து வருகிறேன். என்னுடன் படித்த 80க்கும் மேற்பட்டோர் பல துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இதற்கெல்லாம் காரணமான ஆசிரியர் பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் எதிர்காலத்தில் சிவில் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிகளில் அமர வேண்டும் என்ற நோக்கில் படிக்க வேண்டும். மேலும் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து தேவையான அனைத்து வசதிகளை செய்து தர வேண்டும்.



-கார்த்தி, முன்னாள் மாணவர், விவசாயி

கல்வியில் முன்னேற 'அட்வைஸ்'

விவசாயம் சார்ந்த நவீன கருவிகள் மூலம் விவசாயம் செய்தும், மற்ற விவசாயிகளுக்கு உதவி செய்தும் விவசாயத்தில் முன்னோடியாக இருக்கிறேன். நாங்கள் படிக்கும் காலங்களில் அரசு பணி எட்டாக்கனியாக இருந்தது. இந்த காலத்தில் உள்ளது போன்ற வசதிகள் ஏதும் அப்போது இல்லை. பள்ளியில் உள்ள கல்வி வசதிகளை பயன்படுத்தி மாணவர்கள் கல்வியில் முன்னேறி எதிர்காலத்தில் அரசு பணிகளுக்கும், உயர்பதவிகளை வகிக்க மாணவர்கள் இப்போது முதல் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.



-ஆனந்தமூர்த்தி, பட்டதாரி கணித ஆசிரியர்.

ஸ்திரமான அடிப்படை கல்வி

நான் இப்பள்ளியில் கடந்த 2012ம் ஆண்டிலிருந்து 13 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். அடிப்படை கல்வியை ஸ்திரமாக அளிப்பதால் இவர்கள் உயர்கல்வியில் 95 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதிக்கின்றனர். பெண் பிள்ளைகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. இக்கிராம மக்கள், முக்கியஸ்தர்கள், முன்னாள் மாணவர்கள் பள்ளியின் மீது தனி கவனம் செலுத்தி வருவது எங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு பெருமையான செய்தியாகும். எதிர்காலத்தில் இக்கிராமத்தில் இன்னும் அதிகமானோர் அரசு பணிகளுக்கு செல்வார்கள் என்பது நிச்சயம்.



-வாசு, முன்னாள் ஊராட்சி தலைவர், விவசாயி.

உயர் நிலைப் பள்ளியாவது எப்போது

பள்ளி ஆசிரியர்கள், அனைத்து மாணவர்கள் மீதும் தனி கவனம் செலுத்தி கற்பிக்கின்றனர். அதன் பலனாக இங்கு படித்த பலர் அரசு பணியில் உள்ளனர். தற்போது பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அதனை விரைந்து நிரப்ப வேண்டும். மேலும் நான் ஊராட்சி தலைவராக இருந்த போது இப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கடந்த 2007ம் ஆண்டு ஊர் சார்பாக ஒரு லட்சம் ரூபாய் அரசு கணக்கில் செலுத்தினேன். நுாற்றாண்டு விழா கண்ட பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக அங்கீகாரத்தை அரசு அளித்து கவுரவிக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us