/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/உயரமான வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் அவதி: இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம்உயரமான வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் அவதி: இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம்
உயரமான வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் அவதி: இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம்
உயரமான வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் அவதி: இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம்
உயரமான வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் அவதி: இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம்
ADDED : ஜூன் 05, 2024 11:06 PM

விழுப்புரம்: விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் புதிய பைபாசிற்கு செல்லும் சாலையில் வேகத்தடைகள் அதிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை, விழுப்புரம் அடுத்த ஜானகிபுரத்தில் தொடங்கி வளவனுார் வழியாக பைபாஸ் புதுச்சேரி செல்கிறது. விழுப்புரத்தில் இந்த சாலை பணிகள் முடிந்து, வாகனங்கள் தற்காலிகமாக செல்கிறது.
இதனால், விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வாகன ஓட்டிகள் பலர், இந்த புதிய சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர். விழுப்புரம் நகரிலிருந்து கே.கே.ரோடு வழியாக செல்லும் சாலாமேடு, மேலமேடு மெயின்ரோட்டில் சென்று, பைபாஸ் வழியாக செல்கின்றனர். அதே போல், புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வரும் பலரும் இதே சாலாமேடு சாலை வழியாக வருகின்றனர்.
இதனால், கே.கே.ரோடு - தளவனுார் தார் சாலை முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலை தற்போது பிரதான மெயின் ரோடு ஆகியுள்ள நிலையில், விழுப்புரம் கே.கே.ரோடு முதல் இ.பி.காலனி, சாலாமேடு, மேலமேடு வரை 5 கி.மீ., தொலைவிற்கு சாலை புதுப்பிக்காமல், பல இடங்களில் மேடு, பள்ளங்களாக உள்ளது.
இச்சாலையில், கே.கே.ரோடு முதல் சாலாமேடு, திருப்பாச்சனுார் வரை 20 இடங்களில் மிகப்பெரிய வேகத்தடைகள் உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். குறிப்பாக கார், வேன் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் வேகத் தடைகளில் உரசி செல்லும் வகையில் மிக உயரமாக அமைந்துள்ளன.
குறிப்பாக கே.கே.ரோடு சிஸ் நகர் தொடங்கி, வள்ளலார் நகர், இ.பி.காலனி, சாலாமேடு, மேலமேடு ஆகிய இடங்களில் 4 கி.மீ., தொலைவில் 15 இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. இவை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இந்த சாலையில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் லாரிகள் அணி வகுத்ததால் பாதுகாப்புக்காக அந்தந்த பகுதி மக்கள், வேகத்தடைகள் அமைத்துக்கொண்டனர்.
தற்போது மணல் லாரிகள் இயங்காத நிலையில், பல ஆண்டுகளாக வேக தடைகள் உள்ளன. இந்த சாலை, விழுப்புரம் - தளவனுார் மெயின்ரோடாக இருந்த நிலையில், தற்போது, புதுச்சேரி பைபாஸ் சாலை சந்திக்கும் முக்கிய சாலையாக மாறியுள்ளது. இருப்பினும், சாலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் விதிகளை மீறி வேகத்தடைகள் தொடர்கிறது.
அந்த வேகத்தடைகளும் அதிக உயரத்தில் உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அந்த சாலை வழியாக 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செல்கின்றனர். தளவானூர், கண்டமானடி அரசு பஸ்களும் செல்கின்றன. இந்த வழியாக செல்லும் அரசு பஸ் டிரைவர்களும், வேகத்தடையால் முதுகுவலியால் அவதிப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இரவு நேரத்தில் சாலையில் வேகத்தடைகள் இருப்பது தெரியாததால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பலர் விபத்தில் சிக்குகின்றனர்.
இதனை நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து, சாலையை புதுப்பிக்கவும், வேகத்தடைகளை விரைந்து சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.