/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விதிகளை மீறி வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறல்விதிகளை மீறி வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறல்
விதிகளை மீறி வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறல்
விதிகளை மீறி வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறல்
விதிகளை மீறி வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறல்
ADDED : ஜூலை 20, 2024 05:42 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் போக்குவரத்து விதிமுறை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகள் மீது எவ்வளவுதான் வழக்கு போட்டாலும், அபராதம் என விதித்தாலும் விதிமுறைகளை மீறிச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர்.
விழுப்புரம் நகரில் தினமும் வாகனங்களின் போக்குவரத்து எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வாகன ஓட்டிகள் தங்களின் அவசரம் கருதி, போக்குவரத்து விதிமுறைகள் மீறி தாறுமாறாக ஓட்டிச் செல்கின்றனர்.
விழுப்புரத்தில் சென்னை, திருச்சி, புதுச்சேரி, திருக்கோவிலுார் நெடுஞ்சாலைகளை இணைக்கும் பகுதியில் நான்கு முனை சிக்னல் இயங்குகிறது. சில நேரங்களில் இந்த சிக்னல் இயங்காத நிலை ஏற்படும் போது, அங்கு போக்குவரத்து போலீசார் பணியிலிருந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இது மட்டுமின்றி, விதிமுறை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகளை கண்காணிக்கும் பணிகளில் போலீசார், காந்தி சிலையருகே, கிழக்கு பாண்டி ரோடு, புதிய பஸ் நிலையம் அருகே வாகன சோதனையிலும் ஈடுபடுகின்றனர்.
போக்குவரத்து விதிமுறை மீறிச் செல்வோரின் குற்றங்களுக்கு ஏற்ப 100 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1000 ரூபாய் வரை மட்டுமே அபராதம் விதிக்கின்றனர். இந்த தொகை பெரிய அளவில் இல்லாத நிலையில் உடனடியாக ஆன்லைன் மூலம் அபராதத்தை செலுத்திவிட்டுச் சென்று விடுகின்றனர்.
நகரில், போக்குவரத்து பிசியான நேரங்களில் கூட, அதிக சிசி கொண்ட உயர் ரக பைக்குகளில் இளைஞர்கள், லைசன்ஸ் பெறும் வயதைக் கூட எட்டாத சிறுவர்களும் ரேசில் செல்வது போல அதிவேகத்தில் செல்கின்றனர். இவர்களின் வாகனங்களில் இருந்து வரும் அதிக சத்தத்தாலும், திடீரென அதிவேகத்தில் இடையில் புகுந்து செல்வதாலும், போக்குவரத்து விதிமுறை கடைபிடித்து குடும்பத்துடன் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.
போலீசார் எவ்வளவு தான் வழக்கு போட்டு அபராதத்தை வசூலித்தாலும், போக்குவரத்து விதிமீறல் வழக்குகளின் நிலையை குறைக்க முடியாமல் திணறுகின்றனர்.
இவர்கள் மட்டுமின்றி, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மாதத்தில் இரு முறை நெடுஞ்சாலைகளில் ஓரிடத்தில் நின்று விதிமீறல் வழக்குகள் போடுகின்றனர். இருந்த போதிலும், விதிமுறை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகளின் செயல்பாடு குறையாமல் உள்ளது.
இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர், சிக்னலை கூட மதிக்காமல் தங்களின் வாகனங்களை அதிவேகத்தில் ஓட்டி செல்வதால், விதிமுறையை ஒழுங்காக மதித்து செல்வோர் கூட விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறுவோர் மீது கூடுதலாக அபராத தொகை வசூலிப்பதுடன், கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும்.