Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நடைமுறைக்கு ஒத்துவராத கம்யூ., கோரிக்கை தி.மு.க., கூட்டணியில் 'உள் குத்து' ஆரம்பம்

நடைமுறைக்கு ஒத்துவராத கம்யூ., கோரிக்கை தி.மு.க., கூட்டணியில் 'உள் குத்து' ஆரம்பம்

நடைமுறைக்கு ஒத்துவராத கம்யூ., கோரிக்கை தி.மு.க., கூட்டணியில் 'உள் குத்து' ஆரம்பம்

நடைமுறைக்கு ஒத்துவராத கம்யூ., கோரிக்கை தி.மு.க., கூட்டணியில் 'உள் குத்து' ஆரம்பம்

ADDED : ஜூன் 10, 2025 06:30 AM


Google News
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, சட்டசபையில் தனது கன்னிப்பேச்சில், தனது தொகுதியில் அரசு கலைக் கல்லுாரி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்று, அன்னியூரில் அரசு கலைக் கல்லுாரி அமைக்கப்படுமென கடந்த பட்ஜெட் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து, அன்னியூர் அரசு மேல்நிலை பள்ளியில், தற்காலிகமாக கல்லுாரி துவங்கப்பட்டுள்ளது. இக்கல்லுாரியில், 5 பாடப் பிரிவுகளில், மொத்தம் 280 இடங்களில் சேர்வதற்கு 11 ஆயிரத்து 948 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 3 ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆளுங்கட்சி கூட்டணியான மா.கம்யூ., சார்பில், அன்னியூர் புதிய அரசு கல்லுாரியை, போக்குவரத்து வசதியுள்ள வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் கெடார், காணை, விக்கிரவாண்டி, நேமூர் ஆகிய ஏதேனும் ஒரு பகுதிக்கு மாற்ற வலியுறுத்தி உள்ளது.

இதற்கிடையே எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா கோரிக்கையின்படி, அரசு போக்குவரத்து அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர். தற்போது அன்னியூர் வழியாக 8 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தினந்தோறும் 52 முறை பஸ்கள் அன்னியூர் வந்து செல்கின்றன. எம்.எல்.ஏ., பரிந்துரையின்படி, புதிய அரசு கல்லுாரியை இணைக்கும் வகையில் விழுப்புரம், விக்கிரவாண்டி, நரசிங்கனுார், அனந்தபுரம் குறுக்கு சாலை, கல்யாணம்பூண்டி, சலவனுார் ஆகிய இடங்களிலிருந்து 17 கிராமங்களை இணைக்கும் வகையில், கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

இதற்கான வழித்தட ஆய்வு துவக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உள்குத்து ஆரம்பம்


கடந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியை எதிர்பார்த்த மா.கம்யூ.,வுக்கு ஏமாற்றமே கிடைத்தது. கூட்டணியில் வி.சி., கட்சிக்கு அளிக்கும் முக்கியத்துவம் நமக்கு இல்லையே என்கிற ஆதங்கமும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை வெளியில் காட்டாமல், உள்குத்து வேலையை கம்யூ., தரப்பில் துவங்கியுள்ளதாக, ஆளுங்கட்சி தரப்பில் தெரிவிக்கின்றனர்.

மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியுமா? கூடுதல் பஸ் வசதி செய்வதை விடுத்து, கல்லுாரியை இடமாற்றம் செய்யக் கோருவது வேடிக்கையாக உள்ளது. நடைமுறைக்கு ஒத்து வராத கோரிக்கையை துாக்கி பிடிப்பதாக, ஆளுங்கட்சி தரப்பில் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us