Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு பள்ளி மாணவர்களை சீரழிக்கும் போதை வஸ்துகள்; விழுப்புரத்தில் 'ஜோர்'

அரசு பள்ளி மாணவர்களை சீரழிக்கும் போதை வஸ்துகள்; விழுப்புரத்தில் 'ஜோர்'

அரசு பள்ளி மாணவர்களை சீரழிக்கும் போதை வஸ்துகள்; விழுப்புரத்தில் 'ஜோர்'

அரசு பள்ளி மாணவர்களை சீரழிக்கும் போதை வஸ்துகள்; விழுப்புரத்தில் 'ஜோர்'

ADDED : செப் 09, 2025 05:58 AM


Google News
விழுப்புரம் மாவட்டத்தில், போதை பொருள் விற்பனை அதிகரித்து வருவதால், அதற்கு அடிமையாகும் வாலிபர்களால் மோதல்கள் அதிகரிப்பதோடு, கொலை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது.

பள்ளி, கல்லுாரி மாணவர்களை மையமாக வைத்து போதை பொருள் விற்பனை செய்வதாக புகார் எழுந்ததால், போலீசார், அனைத்து, பள்ளி, கல்லுாரிகளிலும் தொடர்ந்து போதை பொருளால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆனால், விழுப்புரம் வட்டாரத்தில் கஞ்சா, புகையிலை, போதை பாக்குகள் விற்பனை கிராமங்கள் வரை ஜோராக நடப்பதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், நகரம், கிராமங்களில் பெட்டி கடைகளில் குட்கா விற்போரை பிடித்து வழக்கு பதிவு செய்யும் போலீசார், மெயின் சப்ளையர்களை கைது செய்யாததால் குட்கா விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. சில வடமாநில தொழிலாளர்கள், சக உள்ளூர் தொழிலாளர்களுக்கு கஞ்சா, குட்கா பழக்கத்தை விதைக்கின்றனர் என கூறினர்.

பெங்களூருலிருந்து, திருவண்ணாமலை வழியாக கடத்தி வரப்படும் குட்கா, விழுப்புரத்தில் டீலர்கள் மூலம் பிரித்து சில்லரை மளிகை கடைகளுக்கு, மளிகை பொருட்களுடன் அனுப்படுகிறது. இதே போல், கஞ்சா விற்பனையும் பரவலாக உள்ளது.

விழுப்புரம் நகர மற்றும் கிராமப்புற பகுதி அரசு பள்ளிகளிலிருந்து வெளியே வரும் மாணவர்களுக்கு வாசலிலே கஞ்சா, குட்கா போதை பொருட்களை மர்ம நபர்கள் விற்கின்றனர். போதை பொருளை பயன்படுத்தும் மாணவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. தட்டி கேட்கும் ஆசிரியர்களையும் தகாத வார்த்தையால் திட்டுகின்றனர்.

விழுப்புரம் பழைய நகராட்சி பூங்கா, மேல்தெரு நகராட்சி வணிக வளாக காலியிடம், ஜானகிபுரம் பைபாஸ் சந்திப்பு போன்ற இடங்களில் பகல் நேரங்களில் கஞ்சா, போதை வஸ்துகளை பயன்படுத்தும் சிறார்கள் மயக்க நிலையிலே உலா வருவதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us