ADDED : ஜூன் 04, 2025 12:23 AM
விழுப்புரம் : விழுப்புரம் நாயக்கன் தோப்பு பகுதியில், சாராயம் குடிக்கும் போதை ஆசாமிகள் பைக்குகளில் அட்டகாசம் செய்வதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
விழுப்புரம் நகரின் மைய பகுதியில் நாயக்கன்தோப்பு பகுதியில், நீண்டகாலமாக சாராயம் விற்பனை நடப்பதால், காலை, மாலையில் அங்கு வந்து சாராயம் குடித்து செல்லும் நபர்களால் பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
மது அருந்திவிட்டு வரும் சிலர், பைக் உள்ளிட்ட வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவது, நடந்து செல்லும் பொதுமக்கள் மீது உரசுவது போல் செல்வது தொடர்கிறது.
சிலர் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் சைலன்ஸரை கழட்டி விட்டு, அதிக சத்தம் எழுப்பி அட்டகாசம் செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, நாயக்கன்தோப்பு மெயின்ரோடு வழியாக சென்ற பள்ளி மாணவன் சைக்கிள் மீது மது போதை ஆசாமி ஓட்டி வந்த பைக் மோதி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றது.
போதை ஆசாமிகளால் தொடரும் அடாவடியால், பொதுமக்கள் வெளியில் நடமாட அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.