Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மத்திய அரசின் பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்தில்... ரூ.53 கோடி: மாவட்டம் முழுதும் 89 ஆயிரம் விவசாயிகள் பலன்

மத்திய அரசின் பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்தில்... ரூ.53 கோடி: மாவட்டம் முழுதும் 89 ஆயிரம் விவசாயிகள் பலன்

மத்திய அரசின் பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்தில்... ரூ.53 கோடி: மாவட்டம் முழுதும் 89 ஆயிரம் விவசாயிகள் பலன்

மத்திய அரசின் பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்தில்... ரூ.53 கோடி: மாவட்டம் முழுதும் 89 ஆயிரம் விவசாயிகள் பலன்

ADDED : செப் 18, 2025 03:42 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின்படி, நடப்பு ஆண்டு, மாவட்டம் முழுதும் 89 ஆயிரம் விவசாயிகளுக்கு, ரூ.53 கோடியே 40 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியதால், மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம், இந்திய விவசாயிகளின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக துவங்கப்பட்டது. ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவியை நேரடியாக மூன்று சம தவணைகளில் மத்திய அரசு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வழங்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த, 2019ம் ஆண்டு துவங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களின் பிடியில் சிக்காமல் பாதுகாத்து, விவசாய நடவடிக்கைகளில் தொடர்வதை உறுதி செய்வதோடு, வெளிப்படைத்தன்மையுடன் நேரடிப் பலன் பரிமாற்ற முறையில் நிதி உதவி வழங்கப்படுகிறது.

விவசாய நிலம் வைத்திருக்கும் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச வருமான ஆதரவாக இத்திட்டம் செயல்படுகிறது. பணப்பலன்கள் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகின்றன.

இத்திட்டத்தின்படி, பயனாளியின் பெயரில் நில உடமை (பட்டா) இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒன்றிற்கு மேற்பட்டோர் பயன் பெற இயலாது.

குடும்பத்தில் டாக்டர், பொறியாளர், வழக்கறிஞர், வருமான வரி செலுத்துபவர், அரசு ஊழியர், ரூ.10 ஆயிரத்திற்கு மேல் ஓய்வூதியம் பெறுவோர், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இருந்தால், இத்திட்டத்தில் பயன் பெற இயலாது.

திட்டம் அறிவிக்கப்பட்ட கடந்த, 2019ம் ஆண்டு பிப்., 1 ம் தேதிக்கு பிறகு கிரையம் பெற்ற நில உரிமையாளர் இந்த திட்டத்தில் பயன்பெற இயலாது.

மூதாதையர் சொத்தாக இருப்பின் வாரிசு அடிப்படையில் குறிப்பிட்ட தேதிக்கு பிறகு பட்டா மாற்றம் செய்திருந்தாலும், இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.

தகுதி வாய்ந்த விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெற தங்கள் பகுதி வேளாண்துறை அலுவலர்களை அணுகலாம்.

பயனாளிகள், இ-சேவை மையம் மூலம் ஆதார் அட்டை நகல், பட்டா நகல், வங்கி பாஸ் புத்தக நகல், கைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்திட வேண்டும்.

10 ஆயிரம் பேர் பாதிப்பு

இத்திட்டத்தில், பயனாளிகளுக்கான நிதியுதவி கிடைக்கவில்லை என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில், பயனாளிகள் வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைக்காததால், 3,110 விவசாயிகளுக்கும், வட்டார வேளாண் அலுவலர் மூலம் நில உரிமை சான்றினை பதிவேற்றம் செய்யாததால் 1,311 விவசாயிகளுக்கும், இ-சேவை மையங்களில் கைரேகை, ஆதார் எண் பதிவேற்றம் செய்யாததால் 6,102 விவசாயிகளுக்கும், மத்திய அரசு நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத காரணத்தால், 10 ஆயிரத்து 523 விவசாயிகளுக்கு, மத்திய அரசின் நிதியுதவி தடைபட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட வேளாண் துறை அலுவலகம் மூலம், அந்தந்த வட்டார வேளாண் அலுவலகத்திற்கு பட்டியல் அனுப்பி, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட விவசாயிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வட்டார வேளாண் அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



அரசு நிதியுதவி பெற என்ன செய்ய வேண்டும்? பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பயன்பெற, இணையதளம் மூலம் ஓ.டி.பி., அடிப்படையிலான இ-கேஒய்சி-யை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும். அருகிலுள்ள பொது சேவை மையங்களையும் அணுகலாம். நிதியுதவி பாதியில் நிறுத்தப்பட்ட விவசாயிகள், வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைத்தல், வட்டார வேளாண் அலுவலர் மூலம் நில உரிமை சான்றினை பதிவேற்றம், இ-சேவை மையங்களில் கைரேகை, ஆதார் எண் பதிவேற்றம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். இதனை சரி செய்த பின், வழக்கம்போல், அரசு நிதியுதவி கிடைக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us