Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ திருவெண்ணெய்நல்லுாரில் மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு

திருவெண்ணெய்நல்லுாரில் மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு

திருவெண்ணெய்நல்லுாரில் மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு

திருவெண்ணெய்நல்லுாரில் மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு

ADDED : மார் 22, 2025 05:55 AM


Google News
Latest Tamil News
சென்னை : விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியம், திருமுண்டீச்சரத்தில், எட்டாம் நுாற்றாண்டை சேர்ந்த, மூத்ததேவி சிற்பத்தை, சென்னை பல்கலையின் சைவ சித்தாந்த துறை மாணவர் அலெக்ஸ் கண்டெடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது:

சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் படிப்பை முடித்து, தற்போது சென்னை பல்கலையில் சைவ சித்தாந்தம் பயில்கிறேன். ஓய்வு நேரங்களில் தொல்லியல் சான்றுகளைத் தேடி, கள ஆய்வுக்கு செல்வது வழக்கம்.

அவ்வாறு திருவெண்ணெய்நல்லுார் அருகில் உள்ள திருமுண்டீச்சரம் பகுதியில் பஸ்சில் சென்ற போது, பலகைக்கல் சிற்பத்தை கண்டேன்.

உடனே இறங்கி ஆய்வு செய்த போது, அது மூத்த தேவி சிற்பம் என்பதை அறிந்தேன். ஒரு வீட்டின் பின்புறத்தில், வேலிக்கு அருகில் சாத்தப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக கிடந்த சிற்பம், தற்போது, வேலி அகற்றப்பட்டதால் தெரிய வந்துள்ளது.

அதாவது, பல்லவர், சோழர்களின் ஆட்சி காலத்தில், தமிழர்களின் முக்கிய பெண் தெய்வமாக, மூத்த தேவி வழிபாடு இருந்தது. பின், அந்த சிற்பங்கள் அகற்றப்பட்டன.

இந்த ஊரில், சோழர் காலத்தை சேர்ந்த, சிவலோகநாதர் கோவில் உள்ளது. அப்பரால் பாடப்பட்ட இக்கோவிலில், இந்த சிற்பம் இருந்திருக்கலாம். பின், அது வழிபாட்டில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம்.

பொதுவாக, பல்லவர் கால மூத்த தேவி சிற்பங்கள், பருத்த உடல், பருத்து கீழிறங்கிய வயிறு, மார்புடன் இருக்கும். இந்த சிற்பம், இடை மெலிந்த நிலையில் உள்ளது. அதனால், இது முற்கால சோழர்களின், எட்டு அல்லது ஒன்பதாம் நுாற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். இது, 22 செ.மீ., அகலம், 35 செ.மீ., நீளம் உள்ளது.

அமர்ந்த நிலையில், வலதுகால் தொங்கவிட்ட நிலையில், இடதுகால் மடித்த நிலையில் உள்ளது. சிலை வலதுபுறத்தில், மாந்தன், காக்கை கொடி, இடதுபுறத்தில் மாந்தி சிற்பம் உள்ளது. சிற்பத்தின் கீழ்ப் பகுதியில் கழுதை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us