/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை... தேவை; செஞ்சி கோட்டை அகழிகள் துார் வாரப்படுமா?நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை... தேவை; செஞ்சி கோட்டை அகழிகள் துார் வாரப்படுமா?
நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை... தேவை; செஞ்சி கோட்டை அகழிகள் துார் வாரப்படுமா?
நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை... தேவை; செஞ்சி கோட்டை அகழிகள் துார் வாரப்படுமா?
நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை... தேவை; செஞ்சி கோட்டை அகழிகள் துார் வாரப்படுமா?
ADDED : ஜூலை 09, 2024 04:14 AM

செஞ்சி, : செஞ்சி நகரில் நாளுக்கு நாள் தண்ணீர் தேவை அதிகரித்து வருவதால் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கசெஞ்சி கோட்டையில் உள்ள அகழிகளை துார்வார இந்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறப்பு நிலை பேரூராட்சியாக உள்ள செஞ்சியில் தற்போது 25 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். தமிழக நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் செஞ்சி பேரூராட்சியை விரைவில் நகராட்சியாக அறிவிக்க உள்ளனர். அடுத்த சில மாதங்ளில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
தற்போது செஞ்சியை யொட்டி, என்.ஆர்., பேட்டை, ஊரணித்தாங்கல், சிங்கவரம், பொன்பத்தி ஆகிய ஊராட்சிகள் உள்ளன. இவை செஞ்சி நகரின் ஒரு பகுதியாக விரிவடைந்துள்ளன. வரும் காலத்தில் இதில் சில கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க வாய்ப்புள்ளது.
எனவே செஞ்சி நகரின் மக்கள் தொகையுடன் இந்த கிராம மக்களையும் இணைத்தே மக்கள் தொகையாக கணக்கிட வேண்டும்.
புதுச்சேரி - கிருஷ்ண கிரி தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய வழியாகவும், சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்கான பிரதான வழியாகவும் செஞ்சி உள்ளது.
புதுச்சேரி - கிருஷ்ணகிரி விரிவாக்க பணிகள் முடிவடைந்து, செஞ்சி நகரில் பைபஸ் சாலை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதன் பிறகு செஞ்சி நகரின் வளர்ச்சி அசுர வேகம் எடுத்துள்ளது.
நகரில் ஏராளமாக புதிய வர்த்தக நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களின் ஷோரூம்களும் துவங்கி விட்டன. ஏராளமான திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள் உருவாகி விட்டன. செஞ்சி கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால் செஞ்சி நகரின் தண்ணீர் தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. நகரில் உள்ள வீடுகளில் தண்ணீர் தேவைக்கு வீட்டில் உள்ள போர்களையே நம்பி உள்ளனர்.
போர்களுக்கு தண்ணீர் வேண்டும் எனில் செஞ்சி நகரைச் சுற்றியுள்ள நீர் நிலைகளை பாதுகாத்து மேம்படுத்த வேண்டும்.
நகரைச் சுற்றி ஏராளமான ஏரிகள் இருந்தாலும் நீர் வரும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பினால் அழிந்து விட்டன.இப்போது ஒன்றிரண்டு ஏரிகளுக்கு மட்டுமே தண்ணீர் வருகிறது.
கடந்த காலங்களில் செஞ்சி நகரின் நிலத்தடி நீரை பாதுகாப்பதில் செஞ்சி கோட்டையில் உள்ள மீக நீண்ட அகழிகள் முக்கிய பங்கு வகித்தன.
வடக்கில் கிருஷ்ணகிரி கோட்டை, மேற்கில் ராஜகிரி கோட்டை, தெற்கில் சந்திரயான்துர்கம் என்ற மூன்று மலைகளை 13 கி.மீ., துாரத்திற்கு மதில்கள் அமைத்து செஞ்சி கோட்டையை கட்டியுள்ளனர்.
முக்கோண வடிவத்தில் உள்ள செஞ்சி கோட்டையில் தரைப்பகுதியில் உள்ள மதில்களை ஓட்டி 80 அடி அகலத்திலும் 40 அடி ஆழத்திலும் அகழிகளை அமைத்துள்ளனர்.
மூன்று அடுக்குகளாக உள்ள மதில்களுக்கு அடுத்து இருந்த அகழி களில் பெரும் பகுதி அழிந்து விட்டன.
மூன்றில் ஒரு பகுதியே தற்போது வரை அழியாமல் உள்ளது. இந்த அகழிகளுக்கு 3 மலைகளில் இருந்து வரும் மழை வெள்ளமும், ராஜகிரி கோட்டைக்கு தெற்கே உள்ள அடர்ந்த காட்டு பகுதி வெள்ளமும் வந்து சேரும் படி வடிவமைத்துள்ளனர்.
கோடையின் போது போர் நடந்தால் அகழிகளில் தண்ணீர் குறைந்து விடும் என்பதற்காக, அகழிகளுக்கு தேவையான போது தண்ணீர் திறக்க ராஜகிரி கோட்டை அருகே செட்டி குளத்தை அமைத்துள்ளனர்.
இந்த குளத்தை சிறிய அணை போல் வடிவமைத்து அதில் மழை காலத்தில் தண்ணீரை தேக்கி தேவையான போது அகழிக்கு தண்ணீர் திறக்க மதகுகளை கட்டியுள்ளனர்.
அகழிகள் பாதுகாப்பிற்கு மட்டுமின்றி முக்கிய நீர் ஆதாரமாக வும் இருந்தன. இப்போது அகழிகள் பல இடங்களில் சமதளமாகி விட்டன.
எஞ்சியுள்ள அகழி களும் 5 அடி முதல் 10 அடி ஆழத்திற்கு மட்டுமே உள்ளன. மழைக்காலத்தில் அகழிக்கு வரும் தண்ணீரில் மிக குறைந்த அளவே இதில் சேமிக்க முடிகிறது.
மீதம் உள்ளவை வீணாக வெளியேறி வருகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் அகழிகள் முற்றிலும் துார்ந்து அழிந்து போகும்.
எனவே செஞ்சி கோட்டைக்கு எழில் சேர்ப்பதுடன், நகரின் முக்கிய நீர் ஆதாரமா கவும் இருப்பதால் அகழிகளை துார்வார இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.