Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இடைத்தேர்தலையொட்டி இருமடங்கான மது விற்பனை தேர்தல் துறை கண்காணிக்குமா?

இடைத்தேர்தலையொட்டி இருமடங்கான மது விற்பனை தேர்தல் துறை கண்காணிக்குமா?

இடைத்தேர்தலையொட்டி இருமடங்கான மது விற்பனை தேர்தல் துறை கண்காணிக்குமா?

இடைத்தேர்தலையொட்டி இருமடங்கான மது விற்பனை தேர்தல் துறை கண்காணிக்குமா?

ADDED : ஜூலை 02, 2024 06:10 AM


Google News
விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி டாஸ்மாக் மது விற்பனை இரு மடங்காக உயர்ந்துள்ளதால், வீண் மோதலை தடுக்க, அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் முகாமிட்டுள்ளதால் விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதிகளில் ஹோட்டல்களில் விற்பனை சூடு பிடித்துள்ளதோடு, டாஸ்மாக் விற்பனையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது. ஆளும் தி.மு.க., தரப்பில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள ஹைவே ஹோட்டல்களிலும், விழுப்புரம் ஹோட்டல்களிலும் தங்கியுள்ளனர். 30 எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக வந்து, தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள், விக்கிரவாண்டி, கானை, கோலியனூர்ஒன்றியங்கள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு, பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சி நிர்வாகிகள் காணை, விக்கிரவாண்டி, கல்பட்டு, கோனூர், பனையபுரம், தொரவி, கஞ்சனூர், முட்டத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

தினசரி காலை 8 மணிக்கு அந்தந்த கிராமத்திற்கு வரும் இவர்கள் பிரசாரம் செய்துவிட்டு. தங்கி இருக்கும் இடங்களுக்கு செல்கின்றனர். சிலர் அந்தந்த பகுதி கூட்டணி கட்சியினரை அழைத்து தாராளமாக செலவு செய்வதும், அதனால் பலர் மது அருந்துவதும், ஓட்டல்களில் சாப்பிட்டும் மகிழ்ச்சியாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இதுபோல், பா.ம.க.,விலிருந்தும் பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் வந்து, விக்கிரவாண்டி, விழுப்புரம் பகுதியில் தங்கி, பிரசார பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இடைத்தேர்தல் பிரசார களத்தின் மூலம், விக்கிரவாண்டி, கானை, கஞ்சனுார், முண்டியம்பாக்கம், பனையுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேர உணவகங்கள், ஓட்டல்கள் பரபரப்பாக இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் கூட்டமும். அதிக விற்பனையும் நடக்கிறது.

விக்கிரவாண்டி தாலுகாவில் 32 டாஸ்மாக் கடைகளும், அதனையொட்டிய கோலியனூர், கானை ஒன்றிய பகுதிகளில் 8 கடைகளும் என 40 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், சராசரியாக தினசரி ரூ.1 கோடி அளவில் மது விற்பனை நடந்து வந்த நிலையில், தற்போது ரூ.2 கோடி முதல் 2.50 கோடி வரை தினசரி மது விற்பனை, இரு மடங்காக உயர்ந்துள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிக மது விற்பனை காரணமாக, பல இடங்களில், இரு தரப்பு மோதல் பிரச்னைகள் எழுந்து வருவதால், அதனை தேர்தல் துறையினர் கண்காணித்து, கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us