Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு

ADDED : ஜூன் 10, 2024 01:25 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்திய குரூப் 4 போட்டி தேர்வில் 51 ஆயிரத்து 45 பேர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 4 தேர்வு விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடந்தது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், வி.ஏ.ஓ., என 6,224 பணியிடங்களுக்கு தேர்வு நேற்று நடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில், இந்த தேர்வுக்கு 64 ஆயிரத்து 106 தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 9 தாலுகாக்களில் 200 தேர்வு மையங்களில் 51,045 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் 246 தலைமை கண்காணிப்பாளர்களும் பணிபுரிந்தனர்.

விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரி தேர்வு மையத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணைய உறுப்பினர் சிவன் அருள் ஆய்வு செய்தார்.

அதே போல், விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளி தேர்வு மையத்தில், கலெக்டர் பழனி ஆய்வு செய்தார். அரசு சட்டக்கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) கிருஷ்ணலீலா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், தாசில்தார் வசந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 5 தாலுகாக்களில், 138 மையங்களில்நடந்த தேர்விற்கு41,618 பேருக்கு தேர்வாணையம் மூலம் ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.

இதில், 33,445 நபர்கள் மட்டுமே தேர்வெழுதினர். தேர்வையொட்டி, 250க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் என 2000க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டனர். உளுந்துார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெஸ்கி மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சாலை மறியல்


தேர்வர்கள் காலை 9:00 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு இடங்களில் தாமதமாக வந்த சிலரை, தேர்வெழுத அனுமதிக்கவில்லை. இதில், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன், தேர்வெழுத அனுமதிக்காததை கண்டித்து 9:15 மணியளவில் தேர்வர்கள் சிலர் சாலைமறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போகச் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us