/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மதுவிலக்கு அமல்பிரிவு எஸ்.பி., சோதனைச் சாவடிகளில் ஆய்வு மதுவிலக்கு அமல்பிரிவு எஸ்.பி., சோதனைச் சாவடிகளில் ஆய்வு
மதுவிலக்கு அமல்பிரிவு எஸ்.பி., சோதனைச் சாவடிகளில் ஆய்வு
மதுவிலக்கு அமல்பிரிவு எஸ்.பி., சோதனைச் சாவடிகளில் ஆய்வு
மதுவிலக்கு அமல்பிரிவு எஸ்.பி., சோதனைச் சாவடிகளில் ஆய்வு
ADDED : ஜூலை 14, 2024 03:20 PM

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி சம்பவத்தையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் மது கடத்தல் தடுப்பு நடவடிக்கை பணிகளை, மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்.பி., ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய பலிக்குப் பிறகு மாநிலம் முழுதும், கள்ளச்சாராயம், மது பாட்டில் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்.பி.,கோபி, நேற்று முன்தினம் மாலை, விழுப்புரம் மாவட்டத்தில், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் - புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள மதுவிலக்கு அமல் பிரிவு சோதனைச் சாவடிகளை பார்வையிட்டார். வளவனுார் அடுத்த சிறுவந்தாடு சோதனைச் சாவடியில் வாகனங்களை ஆய்வு செய்தார்.
அப்போது, இந்த வழியாக சாராயம், மதுபாட்டில் கடத்துபவர்களை உடனடியாக கைது செய்து, நடவடிக்கை எடுக்கவும், இரு சக்கர வாகனங்கள், பஸ்சில் சாராய பாக்கெட்டுகள், மது பாட்டில் எடுத்துச் செல்லும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது, தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யவும் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து, விழுப்புரத்தில் மெத்தனால் பயன்படுத்த உரிமம் பெற்ற சில தனியார் தொழிற்சாலை, தனியார் மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்து, அங்கு, மெத்தனால் எப்படி பாதுகாப்பாக வைத்துள்ளனர், இருப்பு விபரங்களின் பதிவேடுகளையும் பார்வையிட்டார்.
இதனையடுத்து, விழுப்புரம் ஆயுதப்படை வளாகத்தில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் பகுதி மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாருடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
விழுப்புரம் மாவட்டத்தில், கள்ளச்சாராயத்தை முழுதுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கவும், மது கடத்தல், விற்பனை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். விழுப்புரம் மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி., இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.