/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தேர்தல் முடிவுக்குப்பின் அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு 'செக்' தேர்தல் முடிவுக்குப்பின் அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு 'செக்'
தேர்தல் முடிவுக்குப்பின் அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு 'செக்'
தேர்தல் முடிவுக்குப்பின் அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு 'செக்'
தேர்தல் முடிவுக்குப்பின் அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு 'செக்'
ADDED : ஜூன் 04, 2024 05:30 AM
சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடுதலாக புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க அ.தி.மு.க., தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது.
லோக்சபா தேர்தல் முடிவிற்கு பிறகு அ.தி.மு.க.,வில் கட்சி ரீதியாக பல்வேறு மாற்றங்கள் நடைபெற உள்ளது. கட்சியின் பொது செயலாளராக ஜெ., இருந்த போது, தவறு செய்யும் நிர்வாகிகள், செயல்படாத நிர்வாகிகள், அமைச்சர்கள் என பலரையும் அதிரடியாக நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார்.
ஆனால், தற்போது கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள பழனிசாமி கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவர்கள், செயல்படாத நிர்வாகிகள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகிறார்.
இதற்கு காரணம் ஒவ்வொரு மாவட்டமும், முன்னாள் அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், நடவடிக்கை எடுக்க சம்மந்தபட்ட முன்னாள் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சிக்கல் நீடித்து வருகிறது. இதே நிலை நீடித்தால், வரும் 2026 சட்டசபை தேர்தலில், சிக்கல் ஏற்படும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில், அ.தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக 64 மாவட்ட செயலாளர்கள் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கையை உயர்த்தினால், கட்சி முன்பை விட பலப்படும் என்பதால், லோக்சபா தேர்தல் முடிவிற்கு பிறகு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு அருகே உள்ள கடலுார் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சம்பத், அருண்மொழித்தேவன், பாண்டியன், சொரத்துார் ராஜேந்திரன் என நான்கு மாவட்ட செயலாளர்கள் உள்ளனர்.
ஆனால் விழுப்புரம் மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் சண்முகமும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு குமரகுரு என இருவர் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில், கட்சியை பலப்படுத்தும் வகையில் 2 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என நியமிக்கப்பட்டனர். சமீபத்தில் கூட திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 சட்டசபை தொகுதிகளும் உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு பிறகு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 2 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என கூடுதலாக மாவட்ட செயலாளர்கள் நியமிக்க கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக, கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் 2 மாவட்டங்களிலும் செயல்படாத ஒன்றிய, நகர செயலாளர்களை நீக்கிவிட்டு, புதியதாக நிர்வாகிகளை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தல் முடிவு வந்த பிறகு, புதிய நிர்வாகிகளின் அறிவிப்பு முறைப்படி வெளியாகும் என கூறப்படுகிறது.
-நமது நிருபர்-