Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மானாவாரி பட்டத்தில் சிறுதானியப் பயிர் தரமான விதைகள் வாங்கிட அறிவுரை

மானாவாரி பட்டத்தில் சிறுதானியப் பயிர் தரமான விதைகள் வாங்கிட அறிவுரை

மானாவாரி பட்டத்தில் சிறுதானியப் பயிர் தரமான விதைகள் வாங்கிட அறிவுரை

மானாவாரி பட்டத்தில் சிறுதானியப் பயிர் தரமான விதைகள் வாங்கிட அறிவுரை

ADDED : ஜூன் 24, 2024 05:45 AM


Google News
விழுப்புரம், : விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் மானாவாரி பட்டத்தில் சிறுதானியப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தரமான விதைகள் வாங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பு:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலுார் மாவட்டங்களில், விவசாயிகள் எதிர்வரும் ஆடிப்பட்டத்தில், மானாவாரி சிறுதானியப் பயிர்களான சோளம், கம்பு, தினை, வரகு முதலிய பயிர்களையும், ஒருசில இடங்களில் பயறு வகைப்பயிர்களான துவரை, உளுந்து, தட்டைப்பயிறு முதலியற்றையும் சாகுபடி செய்வர்.

இப்பயிர்களுக்கான விதைகளை, விதை வணிக உரிமம் பெற்ற அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும்.

விதைப்பைகளில் உள்ள விபரங்களைப் பார்த்து, இப்பட்டத்திற்கு உகந்த விதைகளையே வாங்க வேண்டும். தவறாமல் விற்பனை ரசீது கேட்டுப்பெற வேண்டும்.

இதனால் விதை மூலம் பின்னாளில் எழும் பிரச்னைகளைத் தீர்க்க உதவும். விதைகளை விதைப்பதற்கு முன், மண்ணில் போதுமான ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்த பின்னரே விதைப்புப்பணி மேற்கொள்ள வேண்டும்.

உணவு தானியங்கள் விற்கப்படும் கடைகளில் உள்ள தானியங்கள் உணவுக்காக மட்டுமே பயன்படுத்தக்கூடியவை. அவற்றை வாங்கி விதைக்காக பயன்படுத்தக்கூடாது. அவற்றில் போதுமான முளைப்புத்திறன் இருக்காது. பின்னாளில் பூ, காய் வைப்பதில் பிரச்சனை எழ வாய்ப்புள்ளது. எனவே, விபர அட்டை பொருத்தப்பட்ட விதைகளையே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

அனைத்து விதை விற்பனையாளர்களும், தங்கள் நிறுவனத்தில் விதை இருப்பு மற்றும் விலை விபரப் பட்டியல் பலகை வைத்து பராமரிக்க வேண்டும். விதைக்கொள்முதல் செய்தமைக்கான கொள்முதல் பட்டியல், உண்மை நிலை விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல், பதிவுச்சான்று, இருப்புப்பதிவேடு மற்றும் விற்பனைப்பட்டியல் ஆகிய ஆவணங்களை பராமரிக்க வேண்டும்.

விதை வாங்கும் விவசாயிகளுக்கு உரிய படிவத்தில், கையொப்பம் பெற்று வழங்கி அதன் நகல் பராமரிக்க வேண்டும்.

விதை பதிவேடுகள் பராமரிக்காத மற்றும் தரமற்ற விதைகளை விநியோகிக்கும் விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விதை விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us