ADDED : செப் 20, 2025 08:24 PM
திருச்சி:திருச்சியில், கணக்கில் வராத, 50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், பணம் வைத்திருந்த மூவரிடம் விசாரிக்கின்றனர்.
திருச்சி, கோட்டை தனிப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் இரவு, ரோந்து சென்ற போது, திருச்சியை சேர்ந்த பவன் சிங், 32 ஷாம்பு சிங், 41, பரத் குமார், 34, ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அவர்களது கைப்பையில், 49 லட்சத்து 50,000 ரூபாய் வைத்திருந்தனர். உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த போலீசார், வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
வருமான வரித்துறை அலுவலக கண்காணிப்பாளர் முத்தலிப்பிடம், ஹவாலா பணத்தை ஒப்படைத்த போலீசார், சிக்கிய மூவரிடம் விசாரிக்கின்றனர்.