/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/முதலை பண்ணை ஊழியரை கட்டி வைத்து சந்தன மரம் கடத்தல்முதலை பண்ணை ஊழியரை கட்டி வைத்து சந்தன மரம் கடத்தல்
முதலை பண்ணை ஊழியரை கட்டி வைத்து சந்தன மரம் கடத்தல்
முதலை பண்ணை ஊழியரை கட்டி வைத்து சந்தன மரம் கடத்தல்
முதலை பண்ணை ஊழியரை கட்டி வைத்து சந்தன மரம் கடத்தல்
ADDED : ஜூன் 22, 2024 01:14 AM
சாத்தனுார் அணை : திருவண்ணாமலை அடுத்த, சாத்தனுார் அணையில் உள்ள முதலை பண்ணையில், வனத்துறை ஊழியரை கட்டிப்போட்டு, சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணையினுள் வனத்துறை கட்டுப்பாட்டில், 378 முதலைகளுடன் கூடிய முதலை பண்ணை உள்ளது. இங்கு தேக்கு, ரோஸ்வுட், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. வனச்சரக அலுவலர் ராஜராஜன், வனக்காப்பாளர்கள் சேகரன், இந்திரகுமார் மற்றும் தற்காலிக ஊழியர்கள் மூவர் என, ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்திருந்த நிலையில், 10:00 மணியளவில் பாதுகாப்பு பணியில் சேகரன் இருந்தார். மழை பெய்ததால், பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டிய தற்காலிக ஊழியர் தாமதமாக, 11:00 மணிக்கு வந்தார்.
இதையறிந்த நான்கு பேர் கொண்ட கும்பல், திடீரென முதலை பண்ணைக்குள் நுழைந்து, பாதுகாப்பு பணியில் இருந்த சேகரனை கட்டிப்போட்டு, அங்கிருந்த சந்தன மரத்தை, இயந்திரம் மூலம் வெட்டி மினி லாரியில் கடத்தி சென்றனர். தற்காலிக ஊழியர், 11:00 மணிக்கு வந்து பார்த்தபோது, சேகரனை கட்டி போட்டு, சந்தன மரத்தை அறுத்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் யோகேஷ் கார்க், சம்பவ இடத்தை பார்வையிட்டு, அங்குள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை கொண்டு, மரம் வெட்டி கடத்தி சென்றவர்களை தேடி வருகின்றனர். இது குறித்து, சாத்தனுார் அணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.