ADDED : ஜூன் 06, 2024 12:05 AM
தண்டராம்பட்டு:திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த அல்லப்பனுாரில் கல் குவாரி இயங்குகிறது. இங்கிருந்து தென்முடியனுார் கிராமம் வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகள் சென்று வருகின்றன. இதனால், அப்பகுதியிலுள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன.
இதை சீரமைக்க அப்பகுதி மக்கள், நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று மூங்கில்துறைப்பட்டு - தண்டராம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரம் போராட்டம் நடந்தது. தண்டராம்பட்டு போலீசார் பேச்சுக்கு பின் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர்.