Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பரபரப்பு வாழ்க்கை நடுவே 'அமைதி' உடல் - மனம் - ஆன்மா ஒருங்கிணைக்கும் யோகா

பரபரப்பு வாழ்க்கை நடுவே 'அமைதி' உடல் - மனம் - ஆன்மா ஒருங்கிணைக்கும் யோகா

பரபரப்பு வாழ்க்கை நடுவே 'அமைதி' உடல் - மனம் - ஆன்மா ஒருங்கிணைக்கும் யோகா

பரபரப்பு வாழ்க்கை நடுவே 'அமைதி' உடல் - மனம் - ஆன்மா ஒருங்கிணைக்கும் யோகா

ADDED : ஜூன் 20, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
அறிவியல் தொழில்நுட்பமும், மருத்துவ வசதிகளும் எந்தளவு வளர்கிறதோ, அந்தளவு வாழ்க்கை ஓட்டத்தில் பரபரப்பும், மன உளைச்சலும் அதிகரித்திருக்கிறது என்பதும் உண்மை. கட்டுப்பாடில்லா உணவுப்பழக்கம், ஓய்வில்லா உழைப்பு உள்ளிட்ட பல காரணங்களால், இளம் வயதிலேயே பல்வேறு நோய்களும் வந்து விடுகின்றன.மருத்துவம், அறிவியல்... இவற்றையெல்லாம் கடந்து, உடலும், மனமும் ஆரோக்கியத்துடன் இருக்க, யோகா பயிற்சி பேருதவி புரிகிறது. உடல் - மனம் - ஆன்மா ஒருங்கிணைப்புதான், இதில் உள்ள நுணுக்கம்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த யோக கலை கற்றுத்தரும் பயிற்சி மையங்கள், இன்று, நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றன. ஏராளமான பயிற்சியாளர்களும் உருவாகிவிட்டனர். சிறு பிள்ளைகள் துவங்கி பெரியவர்கள் வரை யோகா கற்றுக்கொள்கின்றனர். பிரதமர் மோடி, யோக கலைக்கு அளித்த முக்கியத்துவமும், சர்வதேச யோகா தினம் என்ற அங்கீகாரம் கிடைத்ததும் அக்கலையின் வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறது.

- இன்று(ஜூன் 21) சர்வதேச யோகா தினம்

சாதனை சிறுமி என்ன சொல்கிறார்?

திருப்பூரைச் சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவி சக்தி சஞ்சனா என்பவர், யோக கலையில் பல்வேறு இடங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை அள்ளிக் குவிக்கிறார். கடந்தாண்டு, தேசிய அளவில் நடந்த கேலோ இந்தியா பெண்கள் யோகாசன போட்டியில் தங்கம் வென்று சாதித்தார். கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.''சிறு வயதில் இருந்தே, யோக கலை எனக்கு நன்றாக வந்தது. கடினமான ஆசனங்களை கூட, எளிதாக செய்யும் அளவுக்கு பயிற்சி பெற்றேன். பங்கேற்ற போட்டிகளில் வெற்றி எளிதானது. முன்பெல்லாம் சளி, காய்ச்சலால் அடிக்கடி பாதிக்கப்பட்டு, மருத்துவரிடம் சென்ற நிலை மாறி, தற்போது முழு உடல் ஆரோக்கியத்துடன் உள்ளேன். தொடர்ந்து, யோக கலையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்த விரும்புகிறேன்'' என்றார், சஞ்சனா.



அமைதியே இலக்கு

உலக அமைதியை இலக்காக கொண்டு கடந்த, 68 ஆண்டுக்கு முன் வேதாத்திரி மகிரிஷி, உலக சமுதாய சேவா சங்கம் என்ற அமைப்பை நிறுவி, மனவளக்கலை பயிற்சியை கற்றுக் கொடுத்தார்; இதை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்க, அறிவு திருக்கோவில்கள் செயல்படுகின்றன. இன்று, 27 நாடுகளில் பரவி, லட்சக்கணக்கான மக்கள் பயிற்சி பெறுகின்றனர். எவ்வித மதம் சார்ந்தும் அல்லாமல், மனிதனின் வாழ்வியல் நெறி சார்ந்து இப்பயிற்சி வழங்கப்படுகிறது. தனி மனித அமைதி, குடும்ப அமைதி, ஊர் அமைதி மற்றும் உலக அமைதியை மையப்படுத்தி பயிற்சி வழங்கப்படுகிறது.காமம், குரோதம், லோபம், மோகம், அகங்காரம், மாச்சர்யம் ஆகிய ஆறு குணங்கள் தான், அனைத்து வித பிரச்னைக்கும் காரணம் என்பதை அறிந்து, அவற்றில் இருந்து மனிதன் விடுபடுவதற்கேற்ப பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. போரில்லா நல் உலகம்; ஏழை, பணக்காரன் பாகுபாடில்லாத நிலை, அனைவருக்கும் உணவு, நீர் உள்ளிட்ட, 14 கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளது. திருப்பூரை பொறுத்தவரை, 16 இடங்களில் மனவளக்கலை பயிற்றுவிக்கும் அறிவு திருக்கோவில்கள் உள்ளன. உடல் ஆரோக்கியம் பேண, குடும்பத்தில் நிலவும் பிரச்னைகள் தீர வேண்டும் என்ற எண்ணத்தில் ஏராளமானோர் வருகின்றனர்; தீர்வும் பெறுகின்றனர். - சுந்தரராஜன், துணைத்தலைவர், உலக சமுதாய சேவா சங்கம்



யோக கலையே முதலிடம்

பொதுவாக உடல் ஆரோக்கியம் சார்ந்து, 'ஜிம்' மற்றும் டாக்டர்களை அணுகிய மக்கள், தற்போது யோகா பயிற்சி வாயிலாக தங்கள் பிரச்னைகளை சரி செய்து கொள்கின்றனர். குறிப்பாக, வயிறு சம்மந்தப்பட்ட அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை உள்ளிட்ட வயிறு சம்மந்தப்பட்ட நோய்களால் அவதியுறுவோர், மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட யோகா பயில்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். எளிதான ஆசனங்கள் வாயிலாக, தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்கின்றனர். கை, கால் வலி, உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும், யோகா பயிற்சியின் வாயிலாக தீர்வு பெறுகின்றனர். இன்றைய அவசர உலகில், உட்கொள்ளும் உணவில் முழு ஆரோக்கியம் கிடைப்பதில்லை. இதனால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. சிறு பிள்ளைகள் மத்தியில் மன உளைச்சல் அதிகரித்திருக்கிறது. இவற்றுக்கெல்லாம் தீர்வு தருவதில் யோக கலை தான் முதலிடத்தில் உள்ளது.- சந்தியா, யோகா பயிற்சியாளர்ஹார்ட்புல்னெஸ்



நினைவாற்றல் வளரும்

இன்றைய அதிவேகமான உலகில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, மாணவர்கள் அதிக நேரம் மொபைல் போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களில் மூழ்குகின்றனர். அதை சமன் செய்ய, யோகா ஒரு முக்கியமான கருவியாக மாறியுள்ளது. இதை உணர்ந்துள்ள பெற்றோர், தங்கள் பிள்ளைகளை யோகா பயிற்சி பெற அனுப்பி வைக்கின்றனர். யோகா பயிற்சி பெறுவதன் வாயிலாக நினைவாற்றல் மேம்படுகிறது. டிஜிட்டல் திரையில் மூழ்கும் நேரம் குறைகிறது. உடல் வலிமை, சுறுசுறுப்பு கூடுகிறது. மன அமைதி, கவனச் செறிவு அதிகரிக்கிறது.- ரகுபாலன், யோகா பயிற்றுனர்



எதிர்மறை சிந்தனை மறையும்

கடந்த, 20 ஆண்டுகளாக யோகா பயிற்சி வழங்கி வருகிறோம். 90 சதவீத மக்கள் எதிர்மறையான எண்ணங்களில் தான் இருக்கின்றனர். முடியாது, கூடாது என்ற எண்ணங்களுடன் இருப்பவர்கள் நிரம்ப இருப்பதால், நேர்மறையான எண்ணம் இருப்பவர்களுக்கு அந்த பாதிப்பின் தாக்கம் தென்படுகிறது. எனவே, அவர்களுக்குள் ஒரு பய உணர்வு வருகிறது. இதை உடைத்தெறிய, யோகா உதவுகிறது. தலைமுறைக்கும் தொடரும் உடல் உபாதைகளை நீக்கும் ஆற்றல் யோக கலைக்கு உண்டு. நோய் எதிர்பாற்றலை தரும் ஆற்றலும் யோகாவுக்கு உண்டு.- ராமு சுந்தர்ராஜன் - லட்சுமணன்,யோகா பயிற்சி வழங்கும் சகோதரர்கள்



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us